Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, October 5, 2014

Info Post
அவ்வப்போது சாதனையாளர்களுக்கு அரசு வழங்கும் பரிசு என்பது பெரிய கவுரவம் என்றாலும் பொதுவாக அரசால் வழங்கப்படும் விருதோ பரிசோ அரசியல் ஆதாயம் சார்ந்தது என்று பலரால் வர்ணிக்கப்படுவதுண்டு. கிரிக்கெட், சினிமா தவிர்த்து மற்ற துறைகளில் அரசால் அதிக பரிசுகள்  வழங்கப்படுவதில்லை என்றும் கட்சிக்காரர்க்கோ, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்க்கோ அரசியல் ஆதாயம் நோக்கி வழங்குவதாகவும் விமர்சிக்கப்படுவதுண்டு. இந்தி எழுத்து இருந்ததால் பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்றார் எம்ஜிஆர். ஆனால் அவர் மறைந்தவுடன் இந்தி எழுத்து கொண்ட பாரத ரத்னாவை நாம் வழங்கினோம். காலம் கடந்து வழங்கப்பட்ட விருது வேண்டாம் என்று பாடகர் ஜானகி மறுத்த வரலாறும் உண்டு. 1970களில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் ஒருவருக்கொருவர் பாரத ரத்னாவை பரிந்துரைத்து வாங்கிக் கொண்டதாகவும் விமர்சிப்பவர்கள் உண்டு. இப்படி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்வில்  கலை இலக்கியப் பரிசுகள் எத்தகையவை என்று பார்ப்போம்.


அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞர் என பதவியும், பல பரிசில் பணமும் கொடுக்கப்பட்டு படைப்பாளர்கள் ஆதரிக்கப்பட்டனர். விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரம், பாணரின் ஹர்ஷ சரித்திரம், காளிதாசரின் மேகதூதம் என அரசவைக் கவிஞர்களாலேயே உருவாக்கப்பட்டவை. தென்னிந்தியாவிலும் சங்கம் வைத்து இலக்கியம் வளர்க்க பொருளும், மதிப்பும் கொடுத்துவந்தது அரசர்களே. எண்ணற்ற புராதன கலைப் பொக்கிசங்கள் இந்நாட்டில் இன்று இருப்பதற்குக் காரணம் அந்நாளைய மன்னர்களின் கொடை என்பதை யாரும் மறுக்கமுடியாது. இடைக்காலத்திலும் சரி சுதந்திர போராட்டக் காலத்திலும் சிற்றரசர்களாலும் செல்வந்தர்களாலும் படைப்பாளிகள் ஆதரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சுதந்திரம் அடைந்து மக்களாட்சி உருவான பிறகு மக்கள் பிரதிநிதிகளைவிட தனியார் மற்றும் பெரு நிறுவனங்களின் ஆதரவில்தான் படைப்பாளிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.


இந்தியாவின் 22 ஆட்சி மொழி இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி  விருதின் பண மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்; அடுத்தடுத்த நிலைகளுக்கான பரிசுகள் ஐம்பதாயிரம் இருபத்தைந்தாயிரம் என்று வழங்கப்படுகின்றன. அதுவும் 2009ம் ஆண்டுக்குப் பிறகே இம்மதிப்பு உயர்த்தப்பட்டது. ஆனால் தனியார் பங்களிப்பில் அதே மொழிகளுக்கு வழங்கப்படும் ஞானபீட விருதின் மதிப்போ 11 லட்ச ரூபாய் ஆகும். மற்ற அமைச்சகங்களின் மூலம் வழங்கப்படும் பரிசு தொகை என்பதும் சொற்பமாக இருந்துவருகிறது. ஆங்கில நாளிதழான இந்து வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசுத் தொகை 5 லட்சம். கே.கே. பிர்லா குழுமத்தின் மூலம் இந்திய மொழிகளுக்கு வழங்கப்படும் உரைநடை கவிதை நூலுக்கான சரஸ்வதி சம்மன் விருதோ 10 லட்சம் மதிப்பைக் கொண்டது. இப்படி அரசைவிட தனியார் பங்களிப்பே ஓங்கியுள்ளது.

இறுதியாக தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பெற்ற பிறகு  மத்திய அரசால் வழங்கிவரப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதான தொல்காப்பியர் விருதுடன் வழங்கப்படும் பண மதிப்பு ஐந்து லட்சம் மட்டுமே. தமிழக அரசின் பாரதியார் விருதின் மதிப்பு 2009க்குப் பிறகு தான் ஒரு லட்சம் மற்றும் 8கிராம் தங்கம் என்றானது; தமிழ்த்தாய் விருதின் மதிப்பு ஐந்து லட்சம்; உ.வே.சா விருதும், கபிலர் விருதும் தலா ஒரு லட்சம். தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் நூலுக்கான பரிசுத் தொகை என்பது 30000 ரூபாய்; இயல் இசை நாடக மன்றத்தின் சில கலை அமைப்புகளுக்கான பரிசோ 10000 என்று எண்ணிக்கை அளவில் சிறிய பொருளாதார மரியாதையே மாநில அளவிலும் வழங்கப்படுகிறது. சில துறைகளில் நுழைவுக் கட்டணம் என்று கணிசமான தொகையைக் கட்டியோ, சொந்தக் காசில் அச்சுப் பிரதிகளை அனுப்பியோதான் படைப்பாளிகள் விண்ணப்பிக்க வேண்டிய சூழலும் உள்ளது. அதற்குமேல் உள்ள அதிகார நகர்வுகள் தாண்டி அரசு வழங்கும் பரிசும் பணமதிப்பில் குறைவாக உள்ளது.


மாறாக அரசு சார்பற்ற அமைப்புகளின் இலக்கிய/கலை பரிசுகள் அரசைவிட அதிகமான பணமதிப்பையும் கொண்டுள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, அறிவியல், கவின்கலை, தமிழிசை, வளர்தமிழ் ஆகிய துறைகளுக்கு தலா 1.5 லட்சம் மதிப்புள்ள விருதுகளை வழங்கிவருகிறது. மேலும் மதிப்புறு தகைஞருக்கு 2 லட்சமும், வாழ்நாள் சாதனையாளருக்கு 5 லட்சப்  பணமதிப்பும் கொண்ட விருதும் வழங்கிவருகிறது. அண்மையில் கோலாலம்பூரில் கவிஞர் வைரமுத்து வாங்கிய டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அற வாரியத்தின் விருது 6 லட்சம் மதிப்பு கொண்டது. தினத்தந்தி வழங்கிவரும் அறிஞருக்கான விருதின் பணமதிப்பு 3 லட்சம், இலக்கியத்திற்கான பணமதிப்பு 2 லட்சமாகும்.  ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ராஜா சர் முத்தையா செட்டியார் அறக்கட்டளை, கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை,  முத்துப்பேட்டை ரகமத் அறக்கட்டளை, பி.சுசீலா அறக்கட்டளை மற்றும் மேலும் வெளியில் தெரியாத பல இலக்கிய அமைப்புகள் வழங்கிவரும் விருதுகளின் பணமதிப்பு ஒரு லட்சம் என்பது சாதாரணமாக உள்ளது.


எண்ணிக்கை அளவிலும், பணமதிப்பீட்டு அளவிலும் தனியார் பரிசுகள் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான சமூகச் சூழல்தான் ஆனால் அரசின் பரிசுகள் சார்புடனும், பணமதிப்பின்றியும் அமையாமல் பார்த்துக் கொள்வது காலத்தின் தேவை. 1960களில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சில குற்றவியல் சட்டத்திற்கான அபராதத் தொகை இன்றும் பழைய மதிப்பில் ஆயிரங்களிலேயே உள்ளதென்பது நாடறிந்த உண்மை. அதுபோல இல்லாமல் அரசின் விருதுகள் காலத்திற்கேற்ப மதிப்புயர்த்தப் படவேண்டும். இலவசங்களை அள்ளிக்கொடுக்கக் கோரும் மக்கள், படைப்பாளர்களுக்குப் பரிசுகளையும் அள்ளிக் கொடுக்கக் கோரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு. முதலாளித்துவச் சமூகத்தால் தான் படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள் என்ற நிலையில் இருந்து சமவுடமைச் சமூகத்தாலும் ஆதரிக்கப்படவேண்டும்.

சிறகு இதழுக்காக எழுதிய கட்டுரை

0 comments:

Post a Comment