Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Tuesday, January 13, 2015

பல்லாண்டு வாழ்க, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், நாளைய பிரதமரே, நாளையே இந்தியாவே எனப் பதாகை அடித்து, தெருவெல்லாம் நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமையைக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். இந்த அரசியல் ஒரு புறமிருக்க, திருமண வாழ்த்து விளம்பல், ரசிகர் மன்றப்புலம்பல், வீட்டுமனை விற்பனை அலம்பல், சோமபானக் கடை அறிவிப்புகள் என்று மறுபுறமும் பதாகை அடித்தே நாம் கொண்டாடுகிறோம். வளர்ந்த நாடுகளே வியந்துபோகும் அளவிற்கு நாம் சுவரொட்டி மற்றும் பதாகைத் துறையில் முன்னணியில் உள்ளோம். "இதெல்லாம் ஒரு பெருமையா" என்று நீங்கள் கேட்பது புரிந்தாலும் புரியவேண்டியவருக்குப் புரியவில்லையே.அந்தப் பதாகை எல்லாம் நெகிழி வகை மக்காத குப்பையாக மாசுபடுத்தும் என்ற காரணத்தைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உருப்படியாக ஒரு செய்தியும் அந்தப் பதாகை நிச்சயமாகச் சொல்வதில்லை. அரசியல் என்றால் முக்கியப் புள்ளிகளின் படங்களும், கடைக்கோடி உறுப்பினர் பெயரும் இடம்பெறும், செய்தி என்று தேடிப்பார்த்தால் வாழ்த்துகிறோம் அல்லது வரவேற்கிறோம் அல்லது வணங்குகிறோம் என்ற ஒரே தொடர்கள்தான் சுற்றிச்சுற்றி தெரியும். இடையில் இலக்கணப் பிழைகள், இன்சியல் பிழைகள் எல்லாம் இருந்தால் பெருந்தன்மையாகப் பொறுத்துக் கொள்ளவேண்டும். அப்படியே சினிமாப் பதாகை என்றால் இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என்ற செய்திக்குப் பின்னும் முன்னும் செலவளித்த அத்தனை நபர்களின் படங்களும் இடம் பெற்றிருக்கும். தற்போது பல இளைஞர்க் குழுக்கள் கூட ஆங்காங்கே கூடிப்பேசி ஆட்கள் கூடுமிடங்களில் இரண்டு கரும்புப் படமும் ஒரு பொங்கப் பானைப்படமும் போட்டுவிட்டு சுற்றி பன்னிரண்டு நபர்களின் படங்களையும் போட்டு ஒரு வாழ்த்து விளம்பரப்பலகையை வைத்துவிடுகிறார்கள். விளம்பரங்களுக்கு நடுவில் வாழ்த்தைத் தேடிப்பிடித்து படித்து வாழ்ந்துவருகிறோம்

இதெல்லாம் பிரச்சினையே இல்லை தான், ஆனால் அந்தப் பதாகையைக் குற்றுயிராக இருக்கும் தெருப் பெயர் பலகையை மொத்தமாக மறைத்தும், நல்ல சாலையைத் தோண்டி நாசப்படுத்தியும், சாலையோர நடைமேடையை ஆக்கிரமித்தும், சாலையோர நடைமேடைக் கல்லை உடைத்தும், பசுமையான மரக்கிளையை ஒடித்தும், முக்கிய வளைவுகளில் அதன் அடையாளைத்தையே மாற்றியும் கட்டப்படுகிறது. இதுவரை தெருச் சுவற்றில் மட்டும் விளையாடிய நாச வேலை தெருவெங்கும் அலங்கோலப் படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்ற பாகுபாடே இல்லாமல் மின்கம்பம் தோறும் ஒரு பதாகை கட்டி சாலையில் கவனத்தைக் கெடுக்கிறது. இரவில் விளக்கிட்ட பலகையோ, பகலில் சூரிய ஒளிபட்ட பலகையோ வெளிச்சத்தைப் பிரதிபலித்து வாகன ஓட்டிகளையும் வில்லங்கத்தில் தள்ளுகிறது.

ஏன் இந்த ஆடம்பரம்? கறுப்புப் பணத்தின் திருவிளையாடல் என்றாலும் அவரவர் இடங்களில் வைத்துக் கொள்வதில் சிக்கலில்லை ஆனால் பொதுவிடங்களில் பொதுச் சொத்தை அழித்து வைக்கும் போது கேள்விக்குள்ளாகிறது. இப்படிச் செலவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் என்றைக்காவது தொகுதியின் வரவு செலவு கணக்கைச் சின்னத் துண்டு பிரசுரத்திலாவது அறிவித்ததுண்டா? அல்லது சாலைப் பாதுகாப்பு, சுகாதாரம், மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு போல ஏதாவது விழிப்புணர்வுப் பதாகைதான் வைத்ததுண்டா? எத்தனையோ குடியிருப்புப் பகுதிகளில் சாலை பெயரே தெரியாமல் இருக்கும், அங்கெல்லாம் அப்பகுதியின் வரைபடப் பதாகையிட்டுப் புதியவருக்கு உதவலாம்; பேருந்து நிறுத்தத்தில் நைந்துபோன கூரையை அகற்றி கூரை அமைக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் துணிப் பதாகையாவது பயன்படுத்தலாமே. தோரணங்களால் பிறக்கும் பிரம்மாண்டம் தொல்லை கொடுக்கும், ஆனால் சேவையால் பிறக்கும் பிரம்மாண்டம் சேவிக்க வல்லது.


சிறகு இதழுக்காக எழுதியது

2 comments:

  1. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    ReplyDelete
  2. நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete