சமீபத்தில் அரசு விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ஒருவர் பற்றிய கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கவரல்லர் என நீக்கச் சொல்லி பரிந்துரை வந்தது. காரணம் அந்த எழுத்தாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை என்பதாகும். குறிப்பாக கூகிளில் தேடினால் அவர் எழுத்தும் அவர் நூல்களும் மட்டுமே கிடைக்கின்றனவே தவிர அவரைப் பற்றி வேறு அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கவில்லை. நுட்
பொதுவாக முக்கிய அரசுத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையம் நிர்வகிக்கின்றது. மற்ற தளங்கள் எல்லாம் அந்தந்த துறையின் கீழோ அந்த அமைப்பினாலோ நிர்வகிக்கப்படுகின்றன. இதில் சுமார் 60% தமிழக அரசின் தளங்களுக்கு மேல் தமிழ் இடைமுகமில்லை. அதாவது ஆங்கிலத்தில் மட்டுமே அத்தளம் இருக்கும், தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால் அணுக இயலாமல் போகும். வரலாற்றில் பார்த்தால் 1999 இல் டேம், டேப் குறியாக்கத்தைத் தமிழக அரசு தரப்படுத்தியது. இதன் மூலம் தமிழ் படிப்படியாக கணினி பயன்பாட்டில் பரவலானது. தமிழக அரசு இணையத்தில் முதன்முதலில் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டு வந்தது. பின்னர் தட்டச்சுப் பலகை மூலம் தமிழில் எழுதி அதை ஒளிப்படமாகப் பதிவேற்றினர். இதுவே நெடுங்காலமாகச் செய்துவந்தனர். பின்னர் 2007 காலக்கட்டத்தில் டேம், வானவில் என்று தமிழ் எழுத்துருவில் செய்தி வெளியிடத் தொடங்கினர். 2013, 2017 காலகட்டத்தில் அரசு அலுவலகத்தில் ஒருங்குறி குறித்த அரசாணைகள் வெளிவந்தன. ஒருங்குறி பயன்படுத்தச் சொல்லி வந்த செய்திக் குறிப்பே ஒருங்குறியில் இல்லை என்பது ஒருபுறமிருக்க சுமார் 14 ஆண்டுகள் ஆகியும் ஒருங்குறி முறைக்கு மாற்றவில்லை. மத்திய அரசின் செய்திக் குறிப்புகளே தமிழ் ஒருங்குறியில் வெளியிடப்படும் நிலையில் தமிழக அரசின் செய்திக் குறிப்புகள் அனைத்தும் தமிழ் ஒருங்குறியில் விரைவில் வெளியிட வேண்டும். இயன்றால் இதுவரை வெளிவந்த பழைய செய்திக் குறிப்புகளையும் வானவில் குறியாக்கத்திலிருந்து ஒருங்குறிக்கு மாற்றி வெளியிட வேண்டும். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவராலும் எளிதில் தேடிப் படிக்க முடியும். பிடிஎப் கோப்பாகவே இருந்தாலும் குறியாக்கம் சிதையாமல் ஐஎஸ்ஓ 19005-1 தரத்தில் வெளியிடுவதன் மூலம் இத்தரவுகளைக் கணினியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
அண்மையில் உருவான மயிலாடுதுறையைத் தவிர மற்ற 37 மாவட்டங்களுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தனியான இணையத்தளங்களுள்ளன. இவையெல்லாம் சிறப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழில் இடைமுகம் கொண்டதாக உள்ளன. தமிழ் நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளுள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஆகிய ஏழு மட்டுமே தனியான இணையத்தளத்தைக் கொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் சென்னையில் தான் அதிகமான மக்களிடம் ஆங்கிலப் பயன்பாடு உள்ளது. ஆனால் சென்னையைத் தவிர அனைத்துத் தளங்களிலும் ஆங்கில இடைமுகம் மட்டுமே உள்ளன. மதுரை மற்றும் கோவை மாநகராட்சி இணையத்தளங்களில் கூகிள் மொழிபெயர்ப்பைப் பெயரளவில் கொண்டுள்ளன. இதை மாற்றி சென்னையைப் போல அனைத்து உள்ளாட்சி அமைப்பின் இணையத்தளங்களும் தமிழில் இருக்க வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உட்பட ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழக இணையத்தளங்களிலும் தமிழ் இடைமுகமில்லாமல் உள்ளன. விதிவிலக்காக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் தமிழ் இடைமுகம் கொண்டுள்ளன. வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற தளங்களில் சில செய்திகள் தமிழிலிருந்தாலும் தளத்தின் இடைமுகம் ஆங்கிலத்திலேயே உள்ளன. ஐஐடி மெட்ராஸ் தளமே தமிழிலும் வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளே தங்கள் தளத்தைத் தமிழில் வெளியிடாமல் இருப்பது தர்மசங்கடமே.
தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம், வேலைவாய்ப்புத் தளம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வியுதவித் தொகைத் தளம் எனச் சராசரி நபர்கள் பயன்படுத்தும் தளங்களில் எல்லாம் தமிழ் இடைமுகம் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம், தகவல் தொழில்நுட்பத்துறை போன்றவை தமிழ் இடைமுகம் வைத்திருந்தாலும் அவை முன்பக்கத்தில் இணைப்பாகக் கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட தளங்களே நூற்றுக்கு மேலுள்ளன. கலைப் பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத்துறை போன்ற சில தளங்கள் தமிழக அரசின் தளங்களிலேயே சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அழகு தமிழில் துறைகளின் பெயர்கள் முத்து முத்தான எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அது போல மற்ற தளங்களும் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் முன்பு ஒரு ஆங்கிலத்தில் இணையத்தளம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவற்றுள் சில தமிழில் மாறிவருகின்றன. அவை அனைத்துக் கோயிலுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
சாகித்திய அகாதமி விருது வழங்கிய அனைவர் பெயரும் அகாதமி தளத்தில் பட்டியலிட்டுள்ளனர். அது போல இதுவரை தமிழ் வளர்ச்சித் துறையினால் விருதளிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகள் பட்டியல் பொதுவில் இல்லை. இது விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிலை வைப்பதற்கு இணையாக அவர்கள் பங்களிப்பை ஆவணமாக்கப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அரசுத்துறையினர் தங்கள் தகவல் தொடர்பை அதிகரிக்க சமூகத்தளங்களில் பதிவிடுவது பாராட்டுக்குரியது ஆனால் அதிலும் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழில் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
பல வளர்ந்த நாடுகளின் அரசுத் தளங்கள் எல்லாம் பகிர்வுரிமை கொண்டவை. அதாவது அதன் உள்ளடக்கங்களைப் பகிரலாம், பயன்படுத்தலாம் என்று சட்டரீதியான குறிப்பினை இட்டிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் பொதுத் தகவல் உரிமம்(GODL) சட்டத்தில் இருந்தாலும் பெரும்பாலான தளங்களில் காப்புரிமைக்குட்பட்டவை என்ற வாசகமே உள்ளது. 2016 இல் அரசாணை 105 இன் படி தமிழ் வளர்ச்சிக்கான வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் அத்துறைசார்ந்த தளங்களில் காப்புரிமை இடப்பட்டுள்ளன. இதனால் விக்கிமூலம், பொதுவகம் போன்று சர்வதேசக் களஞ்சியங்களில் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கலுள்ளது. எனவே மக்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகைசெய்யும் படைப்பாக்கப் பொதுவுரிமையை இயன்றவரை அனைத்து அரசுத் தளங்களிலும் வெளியிடவேண்டும். பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறைந்தது முக்கியத் தளங்கள் எல்லாம் சர்வதேச வழிகாட்டல்படி அமைக்க வேண்டும். அதாவது முறையான பண்புகளுடன் தளவடிவமைப்பு, திரைபடிப்பான், ஒலி வடிவ கேப்சா, ஒளிப்படங்களில் அல்ட் விவரிப்பு போன்று உலகளாவிய வலைச் சேர்த்தியத்தின்(W3C) பல நுட்ப வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். அண்மையில் கொரோனா நன்கொடை தளம் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக இல்லை என்று ஒரு கடிதத்தைப் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கம் அரசிற்கு எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருந்தொற்றுக் காலத்தில் இணையப் பயன்பாடு அபரிவிதமாக அதிகரித்துள்ளதும், எதிர்வரும் நவீன நுட்பங்களைக் கருத்தில் கொண்டும் தமிழ்ப் பயன்பாட்டை இணையத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கணித் தமிழ் சார்ந்த தொழில் வளர்ச்சியும், ஆய்வுகளும் பெருகும். பெயர்ப் பலகையில் தமிழல்லாமல் மாற்று மொழியிருந்தால் எதிர்க்குரல் எழுப்பும் அதே முக்கியத்துவம் தமிழில்லாத தளங்களுக்கும் எழுப்ப வேண்டும். ஒருங்குறி மற்றும் தமிழ்ப் பயன்பாடு குறித்து அண்மையில் வெளிவரும் அறிவிப்புகள் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் நிலையான அறிவிப்பாக அனைத்து அரசுத் தளங்களும் தமிழில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வேண்டும்.
--------------------
இந்து தமிழ் திசை இதழுக்காக எழுதியது.
ஆய்விற்குத் திரட்டிய தளங்களின் பட்டியல்
பிற்சேர்க்கை:
ஐஐடி தார்வாட் தளத்தில் கன்னட மொழியிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
கூகிள் விளம்பரங்கள் கொண்ட ஒரே தமிழக அரசு இணையத்தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா
பாராட்டுகள் இராஜாராமன். மிக அவசியமான பரிந்துரை.
ReplyDelete