அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் ஐ. பெரியசாமி (1,35,571) -திமுக, எ.வ. வேலு (94,673 ) -திமுக, பூந்தமல்லி வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி (94,110), நான்காவதாக 93,802 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்றனர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களாக தி. நகர் தொகுதி ஜெ. கருணாநிதி(137), மொடக்குறிச்சி தொகுதி மருத்துவர் சரஸ்வதி(281), தென்காசி தொகுதி பழனி நாடார் (370), ஐந்தாவதாக 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் ஆகியோர் வருகின்றனர்.
அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளாக சுமார் 3.9 லட்சம் பெற்ற சோழிங்கநல்லூர் உள்ளது, அதற்கடுத்து 3 லட்சத்திற்கும் மேல் பெற்ற கவுண்டம்பாளையம், மாதவரம், ஆவடி என உள்ளன. குறைவான வாக்கு பெற்ற தொகுதி என்றால் 101650 பெற்ற துறைமுகம் தொகுதி தான். அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்றாலும் அதே சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் தான். அங்கேதான் இரு பிரதானக் கட்சி வேட்பாளரும் அதிகமான வாக்குகளை 2016 ஆம் தேர்தலில் பெற்றனர். இம்முறை எடப்பாடி தொகுதியில் தான் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுகவின் பலமான தொகுதியாக 2016 இல் ஆர்கே நகர் இருந்தது இம்முறை 66% ஆதரவுடன் எடப்பாடி உள்ளது. பலவீனமான தொகுதியாக திருச்சி மேற்கு 18% ஆதரவுடன் உள்ளது. திமுகவின் பலமான தொகுதியாக கடந்த தேர்தலில் ஒட்டன்சத்திரமும், பலவீனமான தொகுதியாக எடப்பாடியும் இருந்தது. இம்முறை அதே திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் தொகுதி(72%) பலமானதாகவும், எடப்பாடி தொகுதி(28%) பலவீனமாகவும் உள்ளன.
சுயேச்சைகளே இல்லாத தொகுதியாக பவானிசாகரும், அதிக எண்ணிக்கையில் 68 சுயேச்சைகள் போட்டியிட்ட தொகுதியாக கரூரும் உள்ளன. அதிக வாக்கு பெற்ற சுயேச்சையாகப் பனங்காட்டுப் படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி நாடார்(37,727), சமூகநீதி கூட்டமைப்பின் புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன்(23,771), வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம், திருமயம் வேட்பாளர் செல்வகுமார்(15144) ஆகியோர் உள்ளனர். வைப்புத் தொகை இழக்காத ஒரே சுயேச்சை ஹரிநாடார் என்பது குறிப்பிடத் தக்கது.
திமுக கூட்டணி:
45.3% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் முதலிடமும், 73 தொகுதிகளில் இரண்டாமிடமும், கோவை தெற்கு மற்றும் கோவில்பட்டியில் மூன்றாம் இடமும் இக்கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணியைவிட இருமடங்கு அதாவது 1,65,727 தபால் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளனர். இரட்டை இலையுடன் நேரடியாக 159 இடங்களில் உதயசூரியன் போட்டியிட்டு 109 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலமான தொகுதி கிள்ளியூர், சிபிஐ கட்சிக்கு தளி, சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர், விசிகவிற்கு காட்டுமன்னார்கோயில், மதிமுகவிற்கு சாத்தூர் (தனிச்சின்னமில்லை என்பதால் உதயசூரியனாகக் கணக்கில் வருகிறது)
அதிமுக கூட்டணி:
39.7% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 75 தொகுதிகளில் முதலிடமும், 159 தொகுதிகளில் இரண்டாமிடமும், திண்டுக்கல் ஆத்தூரில் வைப்புத் தொகை இழப்பும் இக்கூட்டணி பெற்றது. வாக்கு சதவிகித வித்தியாசத்தில் 50% மேல் 2 தொகுதியிலும், 40% மேல் 4 தொகுதிகளிலும், 30% மேல் 8 தொகுதிகளிலும், 20% மேல் 20 தொகுதிகளிலும், 10% மேல் 49 தொகுதிகளிலும், 1% மேல் 64 தொகுதிகளிலும், அதற்கும் கீழ் 12 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
நாதக
234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மொத்தம் 6.57% வாக்குகள் பெற்று, சீமான் 24% வாக்கு பெற்று அவர் மட்டுமே வைப்புத் தொகை மீட்டார். மொத்தமாக 177 தொகுதிகளில் மூன்றாமிடமும், மீதி 57 தொகுதிகளில் நான்காமிடமும் பெற்றனர். தெளிவான மூன்றாம் அணியாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் 63 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர்.
மநீம கூட்டணி:
தேர்தல் ஆணையத் தகவல்படி அதிகாரப்பூர்வமாக 218 தொகுதியில் போட்டியிட்டு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூரில் மட்டும் வைப்புத் தொகை இழக்கவில்லை. மொத்தம் 2.7% வாக்குகளும், 25 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 77 தொகுதிகளில் நான்காம் இடமும், 56 தொகுதிகளில் ஐந்து மற்றும் 24 தொகுதிகளில் ஆறு என்ற இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடம் பெற்ற கமல்ஹாசன் உட்ப 12 வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். குறிப்பாக மருத்துவர் மகேந்திரன், பழ. கருப்பையா, ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு மற்றும் பத்மாபிரியா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
அமமுக கூட்டணி:
2.8% சதவிகித வாக்குகளுடன் 234 தொகுதிகளில் 1 இரண்டாமிடம், 27 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 75 தொகுதிகளில் நான்காம் இடமும், 71 தொகுதிகளில் ஐந்து மற்றும் 44 தொகுதிகளில் ஆறு என்ற இடங்களைப் பெற்றது. டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உட்பட 15வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று, வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். 227 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்தனர்.
நோட்டா:
மொத்தம் 3,45,538 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளன, அதில் 2,812 தபால் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 தொகுதிகளில் நோட்டா நான்காமிடமும், 77 தொகுதிகளில் ஐந்தாம் இடமும், 108 இடங்களில் ஆறாமிடமும் பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில்தான் அதிக சதவிகிதமாக நோட்டா பதிவாகியுள்ளது. விராலிமலையில் குறைந்த அளவிற்கே நோட்டா பதிவானது.
வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த கட்சி அதிக வாக்குப் பெற்றால் அது கட்டாயம் வெற்றியைத் தீர்மானிக்கும். அவ்வகையில் 92 தொகுதிகளில் மூன்றாம் இடம் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த வகைத் தொகுதிகள் 129 இருந்தன. அதே போல 36 தொகுதிகளில் நான்காம் இடமும் சேர்த்தால் வெற்றியைத் தீர்மானிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 42 இருந்தது. ஆக இரு பிரதானக் கூட்டணிக்கு மாற்றாகக் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஓட்டுப் பிரிப்பு நிகழவில்லை எனத் தெரிகிறது. ஜனநாயகத்தின் வலுவே மக்கள் பங்களிப்பான தேர்தலில் தான் உள்ளது. வெறும் வெற்றித் தோல்வியைவிட அதன் புள்ளிவிவர அலசல் புதிய கோணங்களை அறியச் செய்கின்றது, அரசியல் விழிப்புணர்வு ஜனநாயகத்தினை உறுதிசெய்கின்றது.
நியூஸ்18 தளத்திற்காக எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment