செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா வளர்க்குமா என்று ஓர் உரையாடலை உலகப் புத்தக தினம் மற்றும் காப்புரிமை தின இலக்கிய விழாவில் காண நேர்ந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரும் சிறப்பாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருந்தனர். நேரம் குறைவாக இருந்ததாலோ என்னவோ விரைவாக முடித்துவிட்டனர். ஆனால் வாசிப்பை இந்த செநு (AI) பாதிக்காது என்ற அளவில் பெரும்பாலும் உரையாடல் சென்றது. ஆனால் வாசிப்புப் பழக்கத்தை இந்தச் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பாதிக்கக் கூடிய வேறு இடங்கள் குறித்து, பேசப்படாவில்லையோ எனத் தோன்றுகிறது.
அங்கே பேசப்பட்ட தலைப்பு செயற்கை நுண்ணறிவு(AI) என்றாலும் பெரு மொழி மாதிரிகளை(LLM) கொண்டியங்கும் இயற்றறிவுக்(GenAI) கருவிகளைப் பற்றி மட்டுமே உரையாடல் நிகழ்ந்ததாக உள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது பெரிய கடல் அதில் கிளாட், க்ரோக், சாட்ஜிபிடி போன்றவை எல்லாம் இயற்றறிவுக்(GenAI) கருவிகள் மட்டுமே. அதாவது நிகழ்தகவு பரவல்(probability distribution over words) கொண்டு ஒரு உரை, ஒளிப்படம், காணொளி போன்ற படைப்பை இயற்றும் திறனைக் கொண்டு செயல்படும் கருவிகள் மட்டுமே. இந்த இயற்றறிவு ஒரு படைப்பாக்கத்தை எளிமைப் படுத்துகிறது. பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஒரு படைப்பாளியின் படைப்பிற்கு நிகராக யாரும் ஒரு படைப்பை உருவாக்கக் கூடிய வாய்ப்பைக் கொடுக்கிறது. கூகிள் மொழிபெயர்ப்பைவிட (NMT) ஜெமினி மொழிபெயர்ப்பு சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவை பெரு மொழி மாதிரிகள் (LLM)கொண்டு உருவானதே. இது முழுக்கப் படைப்பை முன்னிறுத்துவதால் நிச்சயம் வாசிப்புத்தன்மையை கெடுக்காது. ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது அது மட்டுமல்ல தனிப்பயனாக்கம், பன்முகவடிவு, புள்ளிவிவரங்கள் போன்ற பல்வேறு காரணிகளில் தாக்கத்தைச் செலுத்தி நமது வாசிப்புப் பழக்கத்தைப் பாதிக்கிறது.
உதாரணமாக உங்களுக்கு என்ன விளம்பரம் காட்டலாம், எந்தப் பொருளைப் பரிந்துரை செய்யலாம், எந்தக் காணொளியை எந்த நேரத்தில் காட்டி ஈர்க்கலாம் போன்ற தனிப்பயனாக்கம்(personalization) என்ற பெயரில் நடப்பது முழுக்கச் செநுவின் தாக்குதல் தான். ஒரு மின்னூலை வாசிப்பதற்குள் எத்தனைக் கவனச் சிதறல்களை நீங்கள் கண்டிருப்பீர்கள் என எண்ணிப்பார்க்கலாம். நீங்கள் காலையில் இணையத்தில் தேடிய ஒரு பொருள் தொடர்புடைய ஒரு சலுகை விளம்பரம் நீங்கள் மாலையில் ஒரு சிறுகதையை வாசிக்கும் போது வந்து காட்டும். நாமும் அந்தச் சலுகை முடிவதற்குள் வாங்குவோமே எனத் தடுமாறுவோம். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்பதற்குள் கைப்பேசியின் வந்து விழும் விழிப்பூட்டல்கள் எல்லாம் செநுவின் வெளிப்பாடுகள்தான்.
முன்னர் ஒரு தகவலை அறியவோ இலக்கியம் நுகரவோ வாசிப்பு என்ற ஒன்றே வாய்ப்பாக இருந்தது ஆனால் தற்போது அது பன்முகவடிவில் (multimodal) அதாவது கட்டுரையாக மட்டுமில்லாமல் ஒளி/ஒலி/தரவு வடிவுகளில் கிடைப்பதால் வாசிக்க வேண்டிய தேவை குறைகிறது. கேட்கவோ பார்க்கவோ செநு கொண்டு முடிகிறது. Data mining வழியாக நாம் நினைத்தவற்றைத் தேடி அடையமுடியும். இயற்றறிவு பதிலில்தான் போலியான தகவல்கள் (hallucination) இருக்கும் இதர செநு நுட்பங்களில் சரியான பக்கங்கள் கிடைக்கும். ஓர் ஆய்வறிக்கையைத் தரவுப் பகுப்பாய்வு செய்து வரைகலைக் காட்சியாகவோ ஒரு விளக்கப் படமாகவோ கண்டு கற்றுக் கொள்ள முடிகிறது. வாசிக்க வேண்டிய தேவை குறைகிறது. நவீன தொழில் முறையில் நாம் பல நேரங்களில் skim and skip (அதாவது நுனிப்புல் மேய்ந்து) தான் செய்கிறோம். ஒரு அஞ்சல் மடலை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்வதைவிட முக்கிய வரிகளைப் படித்து உள்ளர்த்தத்தைத் தெரிந்து கொள்கிறோம் தானே?
செநு வழியாகக் கிடைத்துள்ள கேளிக்கை வாய்ப்புகள் அளப்பரியது. விளையாட்டுகளாக இருந்தாலும் சமூகத்தளச் செயலிகளாக இருந்தாலும் வரைகலைக் கருவிகளாக இருந்தாலும் பல மாணவர்களை அடிமையாக்கி இருப்பதை நாம் பார்த்திருப்போம். சமீப காலத்தில் பிரபலமான விளையாட்டுகள் எல்லாம் செநுவைப் பயன்படுத்தி பயனர்களைத் தங்கள் வசம் வைத்துள்ளதைக் கவனிக்கலாம். எதிர்காலத் தலைமுறையின் கற்றல் திறனே இத்தகைய செயலிகள் கெடுத்து வருகின்றன. இவை எல்லாம் வாசிப்புப் பழக்கத்தைக் கெடுக்கும் செயற்கை நுண்ணறிவு விளைவுகளே.
உங்களுக்கு இலவசமாகக் காட்டப்படும் ஒரு கவிதைத் துணுக்கு என்பது அதற்கு மேலேயும் கீழேயும் வந்து நிற்கும் விளம்பரங்களுக்குத் தானே அன்றி வாசிப்பிற்கில்லை. இந்த நுகர்வோர் கலாச்சாரத்தில், சந்தைப் பொருளை நுகர்வோருக்குக் கொண்டு செல்வதைவிட நுகர்வோரைச் சந்தைப் பொருளாக மாற்றவே இந்தச் செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பயன்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அச்சு நாளிதழ்களின் விற்பனை குறைவதற்கும் புத்தக விற்பனை குறைவதற்கும் யூட்டியூப் அலைவரிசை எண்ணிக்கை பெருகுவதும், குறுங்காணொளி வாசகர்கள் அதிகரிப்பதும் வாசிப்புப் பழக்கத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.அதிகமான மக்கள் படிப்பறிவு பெற்றதாலும் கணினிமயமான தொழில் சூழல் ஏற்பட்டதாலும் இயல்பாகவே அதிகமான வார்த்தைகளை நாம் தினமும் பார்க்கிறோம். அது மின்னஞ்சலாக இருந்தாலும் குறுஞ்செய்தியாக இருந்தாலும், செய்தித்துணுக்காக இருந்தாலும் நமது கண்கள் அவற்றைப் பார்த்து வாசித்தே நகர்கிறது. அதிகமானவர்களுக்கு வாசிக்கும் சூழலுக்குள் வந்தாலும் வாசிப்பவர் எண்ணிக்கை உயராமல் இருப்பதற்கு வாசிப்புப் பழக்க வீழ்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். அதே வேளையில் செநு துணையுடன் புதிய படைப்பாளிகள் எழுத்துத் துறையில் பயனடைந்து வருவதையும் மறுப்பதற்கில்லை. அப்படியென்றால் பாதிக்குமா வளர்க்குமா என்றால் யார் அந்த நுட்பத்தைக் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். நீங்கள் என்ன நினைகிறீர்கள்?
0 comments:
Post a Comment