Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, February 24, 2014


அண்மையில் மென்பொருள் சக்கரவர்த்தி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்த சத்ய நாடெல்லா பதவியேற்றார். அவர் ஒர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனாவார். குறிப்பாக, தகவல் தொழிற்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களின் திறனை நமக்கு அடையாளப்படுத்துவதற்காக நம் முன் ஊடகங்களால் கொண்டுவரப்படுகிறார். ஊடகச் சுழல்கள் எல்லாம் ஒர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேறு நாட்டினர் ஒருவர் உயரிய பதவியை அடையும் போது உடனே இந்தியாவிற்குப் பெருமை என்றும் ஒரு வரியைச் சேர்த்துவிடுகிறது. மேலோட்டமாக நமது விட்டுப் பிள்ளை மேடை ஏறும் போது அனைவரும் மகிழ்வது போன்றது என்றாலும் அதன்பின் உள்ள தாக்கத்தை உணர மறுக்கிறது. 

பத்தாண்டுகளுக்கு முன் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் உயிரிழந்த ஹரியானாவில் பிறந்த பெண்மணியாகட்டும், சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் அதிக நேரம் பயணித்த இந்திய வம்சாவளிப் பெண்மணியாகட்டும், அவர்களின் சாதனை சிறப்பானதே என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர் என்பது எத்தகைய உண்மை? குறிப்பாக நாசா போன்ற அமெரிக்கச் சிந்தனையுடைய ஆய்வகத்திற்கு உழைத்துக் கொடுப்பதுதான் நாட்டுக்குப் பெருமையா? அல்லது இந்திய குடியுரிமையைத் துறந்து நாட்டைவிட்டுப் போனவர்களால் நாட்டுக்குப் பெருமையா? உலகில் ஐந்தாவது நாடாக நிலவைத் தொட்டது இந்தியா, எனவே நமது போட்டியாளர் நாசா சார்பாக வேலைசெய்வது பெருமை என்று கொள்ளலாமா? அவர்கள் அனைவரும் இந்தியாவிற்காக உழைக்க வேண்டும் என்பது அதிகபடியான வாதம் என்றாலும் நாட்டிற்குப் பெரிய பலன் இல்லாமல் பெருமை சேர்த்தவராக அடையாளப்படுத்துவது முரண்தானே?

இதன் மூலம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சொல்லும் செய்தி என்ன என்னவென்றால், நன்றாகப் படித்து நாட்டைவிட்டு வெளியே போய் நிறைய சம்பாரித்து அங்கேயே வாழ் என்பதாகும். மற்றொரு செய்தி என்னெவென்றால் தலையே போனாலும் தாய்நாட்டில் மதிப்பில்லை என்பதாகும். எத்தனையோ வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டிக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் வெளிநாட்டு வேலை பெருமையில்லை என்றில்லை ஆனால் வெளிநாட்டினராக வேலை பெருமையில்லை என்பதுதான் உண்மை. இங்கு விளையும் உயர்தர தேயிலைகளை ஏற்றுமதி செய்துவிட்டு சூப்பர் டஸ்ட் டீ என்று மிச்சத்தை நாம் குடிப்பது போல திறமையானவர்களை எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் அள்ளிக் கொள்ளவிட்டு புளங்காயிதம் அடைந்து கொள்கிறோம்.

இதுபோக மற்றொரு பார்வை, இக்கரைக்கு அக்கரை பச்சை. நமது அளவுகோல்கள் எல்லாம் மேற்குலக மாயைகளால் நிரப்பப்பட்டவை. மேற்கு நாடுகளின் அங்கிகாரம் தான் பெருமை என்கிற போக்கும் தவிர்க்கப்படவேண்டும். ஆஸ்கர் தெரிந்த அளவிற்கு தாதாசாஹெப் பால்கே விருதைக் கண்டுகொள்வதில்லை. புக்கர் பரிசு தெரிந்த அளவிற்கு ஞானபீடம் விருதைக் கண்டுகொள்வதில்லை. ஷேக்ஸ்பியர் தெரிந்த அளவிற்கு கம்பன் தெரிவதில்லை. இங்கு ஒருவர் திறமையாக நிர்வாகம் செய்து கொண்டிருப்பார், அல்லது வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பார் ஆனால் நாமோ அமெரிக்க மாகாணத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளியினரையே கொண்டாடுகிறோம், பெருமை கொள்கிறோம்.


உண்மையில் அவர்கள் திறமைசாலிகள், வெற்றியாளர்கள், விருப்பமான இடத்தில் பணி செய்கிறார்கள். இவர்களின் நல்ல பண்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அவற்றை இந்தியாவுடன் முடிந்து பெருமை கொள்வது நம்மை நாமே ஏளனமாகப் பார்ப்பதற்குச் சமம். "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமில்லை என்ன செய்கிறோம் என்பதே முக்கியம், பிற நாடுகளுக்குச் சென்று அறிந்து கொண்டவைகளைக் கொண்டுவந்து இம்மணுக்குப் பயன்பட செய்தால் அதனைப் பெருமை என்று சொல்லலாம். அதுவரை வாழ்த்துக்களும், மகிழ்ச்சிகளையும் மட்டும் கூறிக் கொள்வோமே.


விஜயபாரதம் இதழில் வெளிவந்தது.

1 comments:

  1. சிந்திக்க வேண்டிய கட்டுரை.. நன்று.

    ReplyDelete