Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, April 13, 2014

தேர்தல் அறிக்கையை நம்பியோ, தலைவர்களை நம்பியோ அல்லது ஏதோ சமூக நீதிக்காகவோ வாக்களிக்கிறோம். ஆனால் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்குக் கிடைக்கப் போகும் அதிகாரங்கள் மற்றும் லாபங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அமைச்சர் பதவி கூட இல்லாமல் ஒரு சாதாரண உறுப்பினர் அனுபவிக்கும் அதிகாரங்கள் இதோ..


எழுதப்பட்ட விதியின்படி:
சரத்து 105ன் படி, பதவி சார்ந்த ஊழல் வழக்கு நீங்கலாக வேறு எந்த வழக்கு விசாரணைக்கும் நாடாளுமன்ற தலைவர் அனுமதியின்றி உறுப்பினரை உட்படுத்தமுடியாது.

பாராளுமன்றத்திற்குள் இருக்கும் வரை கட்டுபாடற்ற பேச்சுச் சுதந்திரம் உண்டு. அவதூறு வழக்குகள் செல்லாது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது மாநிலத்தின் தலைமைச் செயலரை விட அந்தஸ்து மிக்கது.

அடிப்படை ஊதியம் 50,000, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள் மற்றும் பணிநிமித்தமான அலுவல் நாள் ஒன்றிற்கு 2000 படி ஊதியம். தொகுதி ஊதியம்(தொகுதி மேம்பாட்டு நிதி இல்லை) 45000 மற்றும் அலுவலக ஊதியம் 40,000 என மொத்தம் 1.5லட்சம் சராசரியான குறைந்தபட்ச மாத வருமானம் உள்ளது. இதற்கு வரிவிலக்கு முழுதும் உள்ளது.

4,00,000 வரை வட்டியில்லாமல் ஊதியத்திலிருந்து முன்பணமும் வாங்கிக் கொள்ளலாம். அடுத்து, டெல்லியில் தங்குமிடம், தொலைபேசி, மின்சாரம், நீர், இணைய இணைப்பு, பராமரிப்புச் செலவு என்று சலுகைகளும் உண்டு.

அதுபோக தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்துசெல்லும் சாலைவழி, ஆகாயவழி, நீர்வழி என்று பயணச் செலவும் வாங்கிக் கொள்ளலாம். பதவியில் இருக்கும் வரை ரயிலில் இந்தியாவிற்குள் எங்கு வேண்டும் என்றாலும் அளவில்லாத முறை முதல்தர பயணம் செல்லலாம்.

ஒருநாள் பதவியிலிருந்தாலும் வாழ்நாள் முழுதும் ஓய்வுதியம் 20,000 ஆகும். மொத்தம் ஐந்தாண்டுகள் தாண்டியும் பதிவியிலிருந்தால் ஒவ்வொரு ஆண்டிற்கும் 1500 ரூபாய் கூடுதல் ஓய்வுதியம் பெறலாம்.

உத்தியோகப்பூர்வ வெளிநாட்டிப் பயணத்தின் போது வெளியுறவுத் துறை நிர்ணயிக்கும் தினப்படியும் உண்டு. ஆண்டுக்கு 34 முறை விமானப் பயணமும் பயன்படுத்திக் கொள்ளலாம். உறுப்பினரின் துணைவர் ஆண்டிற்கு 8 முறை விமானத்திலும், எண்ணிக்கையில்லாத முறை இரயிலிலும் டில்லிக்கு வந்துசெல்லலாம்.

எழுதப்படாத விதியின் படி:
உள்ளாட்சி அமைப்புகளின் பாராமரிப்புச் செலவிற்கு நீங்கலாக, சாலை, நூலகம், மருத்துவ வசதி, கணினி கல்வி, சமுதாயப்பணிகள் போன்ற பணிகளுக்கு ஆண்டிற்கு ஒதுக்கப்படும் 5 கோடி தொகுதி மேம்பாட்டி நிதியை விரும்பிய நபர்களுக்கு/அமைப்பிற்குக் கொடுத்து முழுதும் அல்லது முழுமைக்குச் சற்று குறைவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

பெரிய கல்லூரி/பள்ளிகளில் ஆள் சேர்க்கைக்குப் பரிந்துரைக் கடிதம் வழங்கி விரும்பமான தொகையை வாங்கிக் கொள்ளலாம். எம்.பி. கோட்டா என்று சில நிரந்தர எண்ணிக்கையிலும் சில கல்வி நிலையங்கள் வழங்குகின்றன.

ஆற்று மணல், கல்குவாரி, மரங்கள் போன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசின் இயற்கை வளங்களைப் பங்குபோட்டோ, போடாமலோ எடுத்து விற்றுக் கொள்ளலாம்.

சாலையோரக் கடைகள் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கும், சிறிய நிறுவனங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும் வழங்கும் அன்பளிப்பு போல பெரு நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கடமைப்பட்டுள்ளன. மந்திரியானால் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் அடக்கம்.

பினாமி பெயரில் மலிவான விலையில் ஒரு பெரிய நிலத்தை வாங்கிவிட்டு, அதன் அருகே அரசின் ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தால், நிலத்தின் மதிப்பு அபரிவிதமாக வளர்த்துக் கொள்ளலாம்.

வலுயில்லாத உரிமையாளரை மிரட்டி விரும்பிய நிலங்களை அல்லது வணிக வளாகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

அறக்கட்டளை அல்லது சேவை மையம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டால் மறைமுகமாகப் பெரிய கையூட்டுகளைக் கைமாற்றிக் கொள்ளலாம்.

அரசின் செலவில் அமைக்கப்படும் அனைத்து திட்டங்களிலும் இலவசமாகத் தங்கள் பெயர், படங்களைப் போட்டுக் கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் ஏதேனும் மசோதா வாக்கெடுப்பு என்றால் வாக்குகளை சந்தை நிலவரத்திற்கு விற்கலாம். குறிப்பாக குடுயரசுத் தேர்தலில் நல்ல வருமானம் ஈட்டலாம்.

தனது சொந்தத் தொழிலுக்கு ஊரு விளைவிக்கும் அரசு, தனியார் போட்டியாளர்களின் செயல்பாட்டை நீக்கலாம்.

இலவச வெட்டி-சேலை முதல் இலவச குடியிருப்பு வரை அனைத்திற்கு விலை வைத்து விற்றுக் கொள்ளலாம்.

மாநில, உள்ளாட்சித் தேர்தல்களில் விரும்பியவரை வெற்றிபெறவைத்து சந்தா வாங்கிக் கொள்ளலாம், பிரச்சார ஊதியம் எனப் பல ஊதியங்கள் கிடைக்கும்.

யாருடைய பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதோ அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.

இவ்வளவு அதிகாரமிக்கப் பதவியை நேர்மையாகப் பயன்படுத்தும் தகுதியுடையோருக்கு வழங்கி தப்பித்துக் கொள்ளுங்கள்

ஆதாரம்:
நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம், படியூதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954
லஞ்சவொழிப்பு அறிக்கைகள்


-சிறகு இதழுக்காக எழுதியது

1 comments:

  1. அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் : https://goo.gl/aNvM8w

    ReplyDelete