குறுகிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் மரணதண்டனையை முழுதும் கைவிடவேண்டி அண்மையில் கோரிக்கைகள் இங்கே எழுப்பப்படுகின்றன. உண்மையில் மரணதண்டனையைக் கைவிட்டு அதற்கு இணையாக பிணையில்லாத ஆயுள்தண்டனை தரலாமா? நடைமுறையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை ஆனால் குற்றவாளிக்கு உணவு, மருத்துவம், பாதுகாப்பு, நிர்வாகச் செலவு என பலவற்றை அரசு செய்ய வேண்டும் என்கிறது. துகாராம் ஓம்பலே என்ற சாதாரண காவலர் தன்னுயிரை இழந்து தான் கசாபைப் பிடித்துத் தந்தார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் சதி வெளியில் தெரிந்தது. ஆனால் அசோகச் சக்கரத்துடன் துகாராம் குடும்பத்தைவிட்டு விட்டு நான்காண்டுகளில் குற்றவாளிக்கு ச் செலவு செய்த தொகை மட்டும் 30 கோடி. எங்கே இருக்கிறது சமதர்மம்? பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்குக் கூட மொத்தமாக இவ்வளவு செலவளித்து இருக்கமாட்டோம். இன்னும் ஆயுள் தண்டனை என்றால் எத்தனை குடிமகனின் உழைப்பை வாங்கி வீணடித்திருக்க வேண்டும்? குற்றவாளிக்கு ஆயுள் முழுக்கச் செலவு செய்து பாதுகாக்க எத்தனை மக்கள் கூடுதலாக வரிசெலுத்தி உதவுவார் என எண்ண வேண்டும்.
முக்கியமான சிக்கல் வேறொன்றும் உள்ளது, இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் கொலைவழக்கு, காஷ்மீர் படுகொலை வழக்குகளில் சிக்கிய மூன்று முக்கிய கைதிகள் கந்தகார் விமானக் கடத்தலின் போது விடுவிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்தியா வந்தது. மாறாக விரைவான மரண தண்டனை வரலாற்றை மாற்றி எழுதியிருக்கும். இதனையும் நினைவில் கொள்ளும் போது மரணதண்டனையின் அவசியம் தெரியும். குற்றவாளியையும் பாதுகாக்கவேண்டும், தீவிரவாதிகளிடம் பிணையாகாமல் மக்களையும் காக்க வேண்டும் என்பது தேவைதானா?
மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லப் படும் காரணங்களில் ஓன்று பொதுவாக இத்தண்டனை பாரபட்சமுடன் நடக்கிறது என்பதாகும். ஆனால் எந்தவிதத் தண்டனையானாலும் அதே குற்றச்சாட்டு உள்ளதே, மாநில அரசு விரும்பியவரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலையும் செய்கிறது.எனவே நடைமுறைப்படுத்தலில் தான் கவனம் வேண்டுமே ஒழிய கைவிடலில் இல்லை. தண்டனைகள் பாதுக்கப்பட்டவருக்கு நிவாரணமாக மட்டும் அல்ல மீண்டும் நடக்காமலிருக்கத் தடுப்பு நடவடிக்கையாகும் எனவே உயிருக்கு உயிர் என்ற ஒப்பிடல் சரியில்லை என்பது அடுத்த வாதம். போர்க்களத்தில் எதிரியைச் சுடவேண்டும் போது உயிரை எடுக்கும் உரிமை அரசுக்கில்லை என்பது அர்த்தமற்றது.
குற்றவாளி திருந்தி நடக்க வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அது சூழலைப் பொறுத்தே இருக்கவேண்டும். மனிதஉரிமை என்கிற கோரிக்கைள எப்போதும் சட்ட நடவடிக்கைக்கு எதிராகவே தான் பயன்படுத்தப்பட்டுகிறது. என்றாவது தீவிரவாதம் அல்லது வன்கொடுமைக்கு எதிராகப் போராட் டமோ, சமாதானப் பேச்சோ நடந்துள்ளதா? எனவே அவ்வாறு இருபக்கமும் ஒலிக்காத ஒலிகளை ஓதிக்கியாகவேண்டும். முடிந்தளவிற்கு பாதிப்பின் தீவிரம் அறிந்து மரனதண்டனையைக் குறைக்கலாம் ஆனால் முழுதும் நிறுத்துவது தேவையற்றது.
விஜயபாரதம் இதழுக்காக எழுதியது
50 வருடங்களில் அதிக மழை பெற்ற மாதம் எது தெரியுமா?: தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை : https://goo.gl/j6r1Do
ReplyDelete