Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, May 6, 2026

Info Post

நான்கு முனைப்போட்டியாக 2026 சட்டச்சபைத் தேர்தல் நடந்து முடிந்து மூன்றுமுனை அணியாக முடிவுகள் வந்துவிட்டன. தொங்கு சட்டமன்றம், வென்றவர்கள் தோற்றவர்கள் என்று அரசியல் ஒருபுறம் இருக்க, தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் கொண்டு அடுத்தநிலை பார்வையை இக்கட்டுரை புள்ளிவிவரம் கொண்டு முன்வைக்கிறது. கடந்த தேர்தல்களைப் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் முழுமையாகத் தரவிறக்கம் செய்து கணிக்கப்பட்டது. இத்தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும் தபால் மற்றும் மின்னணு வாக்கு என மொத்தம் 4.93 கோடி வாக்குகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 103 கட்சிகளும் 2209 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையத் தகவல். கட்சி ஆதரித்த சுயேச்சை போன்றோர் இதில் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். கடந்த  2021 இல் 107 கட்சிகளும் 2073 சுயேச்சை வேட்பாளர்களும் 2016 தேர்தலில் 92 கட்சிகளும், 1547 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தனர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் எடப்பாடி கே பழனிச்சாமி (98,110), சோழிங்கநல்லூர் ஈசிஆர் சரவணன் (96780), மாதவரம் சுதர்சனம் (94985) ஆவடி ரமேஷ்குமார்(76311) ஆகியோர் உள்ளனர்.  கடந்த தேர்தலிலும் 93,802 வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களாக சிவகங்கை மாவட்டத் திருப்பத்தூர் சீனிவாச சேதுபதி (1), வேப்பனப்பள்ளி சீனிவாசன் (238), கன்னியாகுமாரி தளவாய் சுந்தரம் (214), போளூர் அபிஷேக்(227) ஆகியோர் வருகின்றனர். கடந்த தேர்தலைப் போலவே சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், மாதவரம், ஆவடி ஆகிய தொகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைவான வாக்குகள் கொண்ட தொகுதிகளாக துறைமுகம், எழும்பூர், இராயபுரம் ஆகியவை உள்ளன.


கரூரில் அதிகபட்சமாக 71 சுயேச்சை வேட்பாளர்களும் பெரம்பூரில் 31 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். கிணத்துக்கடவு மற்றும் அம்பாசமுத்திரத்தில் மட்டுமே சுயேச்சைகள் இல்லாத தொகுதிகளாக உள்ளன. அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சைகளாக எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவுடன் பிரேம்குமார் (50823), மேட்டுப்பாளையம் தொகுதி  முன்னாள் திமுக நிர்வாகி டி.ஆர். சண்முகசுந்தரம் (26756) ஆகியோர் உள்ளனர். தபால் வாக்குகளில் திமுக கூட்டணி 163 இடங்களில் முன்னிலை, 46 இடங்களில் அதிமுக+ முன்னிலை, 25 இடங்களில் தவெக முன்னிலை.

 

தவெக அணி: 35% சதவிகித வாக்குகளுடன் 108 தொகுதிகளில் முதலிடமும், 75 தொகுதிகளில் இரண்டாமிடமும்(சுயேச்சை உட்பட), 51 தொகுதிகளில் மூன்றாமிடமும் பெற்றுள்ளது. எங்குமே கட்டுத் தொகை இழக்கவில்லை. பெரம்பூர், ஆர்.கே.நகர்,திருவெற்றியூர், மாதவரம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட 11 தொகுதிகளில் 50% க்கும் அதிகமான வாக்குகளை இதன் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். எடப்பாடி, நெய்வேலி,விராலிமலை, தளி, கடையநல்லூர், முதுகுளத்தூர், மன்னார்குடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய தொகுதிகள் தான் 23% க்கும் குறைவான வாக்குகளுடன் பலவீனமான தொகுதிகளாக உள்ளன. விழுப்புரம், நீலகிரி, அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி, கன்னியாகுமாரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 6 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலும் மேலும் 6 தொகுதிகள் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றியை இழந்துள்ளது. இந்த 13000 வாக்குகள் கிடைத்திருந்தால் 120 இடங்களில் வெற்றியுடன் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக வந்திருக்கும்.


திமுக கூட்டணி: மொத்தம் 31.3% சதவிகித வாக்குகளுடன் 73 தொகுதிகளில் முதலிடமும், 101 தொகுதிகளில் இரண்டாமிடமும், 60 தொகுதிகளில் மூன்றாமிடமும் பெற்றுள்ளது. இது அதிகமான தபால் வாக்குகளைப் பெற்றுள்ள கூட்டணி. எடப்பாடி, ஓமலூர், சேலம் மேற்கு ஆகிய தொகுதிகள் 17% வாக்குகளுடன் பலவீனமான தொகுதிகளாகவும் ஒட்டன்சத்திரம், துறைமுகம், காட்டுமன்னார்கோயில் ஆகியவை பலமான தொகுதிகளாகவும் உள்ளன.  9 தொகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உட்பட பத்து மாவட்டங்களில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.


அதிமுக கூட்டணி: 27.2% சதவிகித வாக்குகளுடன், 53 தொகுதிகளில் முதலிடமும், 58 தொகுதிகளில் இரண்டாமிடமும், 123 தொகுதிகளில் மூன்றாமிடமும் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் திண்டுக்கல் ஆத்தூரில் மட்டும் கட்டுத் தொகை இழந்தது, இம்முறை 32 இடங்களில் (அதிமுக(19), பாஜக (5), பாமக (2), அமமுக (6))  இழந்துள்ளது. குளத்தூர், திருச்சி கிழக்கு, பாளையங்கோட்டை, மதுரை கிழக்கு ஆகியவை அதிமுகவிற்குப் பலவீனமான தொகுதிகளாக உள்ளன. எடப்படி, விராலிமலை, ஆற்காடு, பாலகோடு ஆகியவை அதிமுகவின் பலமான தொகுதிகளாக உள்ளன.


நாதக: 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மொத்தம் 1972537 (3.99%) வாக்குகள் பெற்று, அனைத்து இடங்களிலும் கட்டுத் தொகை இழந்தனர்.  மொத்தமாக 227 தொகுதிகளில் நான்காமிடமும் 7 தொகுதிகளில் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 177 தொகுதிகளில் மூன்றாமிடம் பிடித்து 6.57% வாக்கு பெற்றிருந்த நிலையில் இக்கட்சி இப்போது பின்னுக்குச் சென்றுள்ளது. காரைக்குடி, ஆலங்குளம், மானாமதுரை ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

நோட்டா: இத்தேர்தலில் மொத்தம் 1,99,801 வாக்குகள் நோட்டாவில் விழுந்துள்ளன. அதில் 3574 வாக்குகள் தபால் வாக்குகளாகும். கடந்த தேர்தலை விட மொத்தமாக 43% நோட்டா வாக்கு குறைந்துள்ளன. ஆனால் தபால் நோட்டா வாக்குகள் அதிகரித்துள்ளன. உதகமண்டலம் மற்றும் பவானிசாகரில் அதிகமான சதவீதத்தில் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. மையிலம், சங்கராபுரம், திருவாடானை ஆகிய தொகுதிகளில் குறைவான சதவீதமே நோட்டாவிற்கு விழுந்துள்ளன.


கடந்த தேர்தல்களில் 92 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்த கட்சியின் வாக்கு வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இம்முறை மூன்று அணிகளாக வாக்குகள் பிரிந்ததால் அவ்வாறு கணக்கிட இயலவில்லை. கூட்டணி கணக்குகளில் விடுபட்ட சில கட்சிகள் வெற்றியைத் தீர்மானித்துள்ளனர். உதாரணமாக சாத்தூர், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக கூட்டணி வெற்றியை இழந்துள்ளது. போளூர், பரமத்திவேலூர், நெய்வேலி, கன்னியாகுமாரி ஆகிய தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வாக்குகளைவிடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக கூட்டணி வெற்றியை இழந்துள்ளது. இவர்கள் கூட்டணி சேர்ந்திருந்தால் கணக்குகள் வேறு வகையில் அமைந்திருக்கலாம். புதிய தமிழகத்தின் வாக்குகளும் ராம்தாஸ் வேட்பாளர்களின் வாக்குகளும் புள்ளிவிவரங்களின் படி அதிமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கவில்லை.

ஜனநாயகத்தின் வலுவே மக்கள் பங்களிப்பான தேர்தலில் தான் உள்ளது. வெறும் வெற்றித் தோல்வியைவிட அதன் புள்ளிவிவர அலசல் புதிய கோணங்களை அறியச் செய்கின்றது, அரசியல் விழிப்புணர்வு ஜனநாயகத்தினை உறுதிசெய்கின்றது. 


மேற்கோள்கள்: தேர்தல் ஆணையத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகள்: 2026 2021,  2016 

Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment