Pages - Menu

Friday, May 27, 2016

தேர்தல் முடிவுகள் சொல்லும் புள்ளிவிவரம்

தேர்தல் வெற்றி தோல்வி என்பது ஒரு கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரமோ, தண்டனையோ அல்ல. மாறாக வாக்காளரின் புறச் சூழலுக்கு ஏற்ப அவர் எடுக்கும் முடிவே. தெருவிற்குப் பாதாளச் சாக்கடை அமைத்தார் என்பதற்காக ஒரு நாட்டின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள உரிமை கொடுக்கும் வாக்காளர்களும் உள்ளார்கள். நாட்டிற்கு எது சிறந்தது என்று முடிவு செய்து பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கும் வாக்காளர்களும் உள்ளார்கள். இத்தேர்தல் முடிவுகளைப் பொருத்தமட்டில் அதன் புள்ளிவிவரங்கள் கொண்டு பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளமுடியும். எந்தக் கட்சி எந்தளவிற்குச் செல்வாக்கு பெற்றுள்ளது, எங்கே அது பலமிழந்துள்ளது என்று அறிந்து கொள்ளமுடியும். வாக்கு எண்ணிக்கையைவிட வாக்கு சதவீதம் முக்கிய அம்சமாகும். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத் தரவுகளைப் புள்ளியியல் மென்பொருளால் பிரத்யேகமாகத் தயரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இதோ

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் மு. கருணாநிதி(68366) -திமுக, சக்கரபாணி(65727) -திமுக, வேலுமணி(64041) -அதிமுக முதலியோர் உள்ளனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இழந்தவர் வரிசையில் ராதாபுரம் அப்பாவு(49) -திமுக, தொல்.திருமாவளவன்(87) -விசிக, திண்டிவனம் ராஜேந்திரன்(101) -அதிமுக முதலியோர் உள்ளனர். அதிக வாக்கு பெற்ற சுயேட்சை என்று பார்த்தால் திமுகவிலிருந்து விலகி போளூரில் போட்டியிட்ட ஏழுமலை(38861) முதல் இடத்திலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புதுக்கோட்டை சொக்கலிங்கம்(22973), மதிமுகவிலிருந்து விலகிய திருச்செங்கோடு முத்துமணி(5923) போன்றோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார்(4891), டிராபிக் ராமசாமி(1229) போன்றோர் குறிப்பிடத்தக்க சுயேட்சை வேட்பாளராவார்கள்.

முக்கிய வேட்பாளர்களின் பெயரில் அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சைகள் பலருள்ளனர். உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பெயரில் இரு சுயேட்சைகளும், ஆலந்தூரில் ராமச்சந்திரன் என்ற பெயரில் மூவரும், காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் என்ற பெயரில் ஒருவரும், ஆத்தூரில் விஸ்வநாதன் பெயரில் ஒருவரும், நாகப்பட்டினத்தில் தாமீமுள் அன்சாரி என்ற ஒருவரும், ராசிபுரத்தில் துரைசாமி பெயரில் இருவரும் என பல இடங்களில் சுயேட்சைகள் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை(1), பட்டுக்கோட்டை(1), கீழ்வேளூர்(1) ஆகிய தொகுதியில் மட்டுமே குறைந்த சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதிக சுயேட்சை வேட்பாளர்கள் கொண்ட தொகுதி என்றால் ஆர்கே நகர்(30), பெரம்பூர்(21), வேளச்சேரி(17) முதலியவையாகும். போளூர் தொகுதியில் தான் அதிகமாக 43538 வாக்குகள் மொத்தமாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு விழுந்துள்ளன. அதற்கடுத்த நிலையில் புதுக்கோட்டை(25804), திருச்செங்கோடு(11459) ஆகிய தொகுதிகளில் அதிகமாக வாக்கு விழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாகத் துறைமுகம் தொகுதியுள்ளது. அதிக வாக்கு பதிவான தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது அங்கேதான் இரு பிரதானக் கட்சி வேட்பாளரும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஆனால் அதிமுகவின் பலமான தொகுதியாக ஆர்கே நகரும், பலவீனமான தொகுதியாக விளவங்கோடும் உள்ளது. திமுகவின் பலமான தொகுதியாக ஒட்டன்சத்திரமும், பலவீனமான தொகுதியாக எடப்பாடியும் உள்ளது. சுயேட்சைகளுக்கு அதிகமாக வாக்குப் பதிவான தொகுதி போளூரும், குறைவான வாக்குகளே பதிவான தொகுதி கீழ்வேளூருமாகும். சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 2419 நோட்டோ வாக்குகள் விழுந்துள்ளன. நோட்டோ ஓட்டு மொத்தமாக 1.3% வாங்கினாலும் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் 2.8 சதவீதமும், குறைவாக உளுந்தூர்பேட்டையில் 0.36 சதவீதமும் பெற்றுள்ளது.


அதிமுக கூட்டணி
பெரும்பான்மை பெற்ற அதிமுக கூட்டணி 92 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விளவங்கோட்டில் மட்டும் நான்காம் இடத்திற்குச் சென்றுள்ளது. 46 தனித் தொகுதிகளில் 31 தொகுதி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி அல்லாமல் நேரடியாகத் திமுகவுடன் 174 தொகுதியில் போட்டியிட்டு 88 தொகுதியில் வென்றுள்ளது. இதில் 1சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் பத்து, இழந்த தொகுதிகள் எட்டு. ஆர்கே நகர், குமாரபாளையம், தொண்டாமுத்தூர், உசிலம்பட்டி,சோழவந்தான், முசிறி, ஆண்டிப்பட்டி, மேலூர், சேலம் தெற்கு ஆகிய 9 தொகுதிகளில் 50 சதவீததிற்கும் அதிகமாக ஆதரவு பெற்றுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இல்லாமல் வென்றுள்ள ஒரே தொகுதி காட்டுமன்னார்கோயிலாகும்.

திமுக கூட்டணி
98 தொகுதிகளில் முதலிடத்தையும், 130 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 4 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் திமுக கூட்டணி பிடித்துள்ளது. குறைந்தபட்சம் 22.6% மேல்தான் அனைத்துத் தொகுதியிலும் பெற்றுள்ளது. அதில் 50% மேல் வாக்கு பெற்ற தொகுதிகள் மட்டும் 15 ஆகும். திருவாரூர்,ஒட்டன்சத்திரம், பத்மனாபபுரம், திருவண்ணாமலை, கொளத்தூர், திருக்கோயிலூர், திருப்பத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் இருபது சதவீததிற்குமேல் வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை நேரடியாக திமுக வென்றுள்ளது. அதிமுகவுடன் நேரடியாகப் போட்டியிட்டு 86 தொகுதியில் திமுக வென்றுள்ளது.

பாமக
துறையூர் மற்றும் ராமநாதபுரம் தவிர அனைத்துத் தொகுதியிலும் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் பாமக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 68 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 100 தொகுதிகளில் ஐந்தாவது இடத்திற்கும் கீழே சென்றுள்ளது. 18 தொகுதிகளில் டெபாசிட் இழக்கவில்லை. 10 தொகுதிகளில் 20% மேல் வாக்குப் பெற்றுள்ளது மேலும் 33 தொகுதிகளில் 10% மேல் வாக்குப் பெற்றுள்ளது. 122 தொகுதிகளில் 2% குறைவாக வாக்குப் பெற்றுள்ளது. பாமகவின் பலமான தொகுதி பாப்பிரெட்டிப்பட்டியும், பலவீனமான தொகுதியாக திருச்சுழியும் உள்ளது. தேர்தலுக்கு முன்பே கோபிச்செட்டிபாளையப் பாமக வேட்பாளர் கட்சி மாறினாலும் 1045 வாக்கு பெற்றுள்ளார்.

பாஜக கூட்டணி
பென்னாகரம், கோவில்பட்டி தவிர அனைத்துத் தொகுதியிலும் இக்கூட்டணி வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 32 தொகுதிகளில் மூன்றாம் இடம், 69 தொகுதிகளில் நான்காம் இடம் பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் அடிப்படையில் நாகர்கோவில், வேதாரண்யம், குளச்சல்,விளவங்கோடு, கோவை தெற்கு, கிள்ளியூர், பத்மனாபபுரம் ஆகியவை மட்டுமே 16.6% மேல் வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழக்கவில்லை. பத்மனாபபுரம், தி.நகர், ஓசூர், துறைமுகம், விருகம்பாக்கம், மதுரை தெற்கு ஆகியவை 10% மேல் வாக்குகளைப் பெற்றுள்ளன. 131 தொகுதிகளில் 2% குறைவாக வாக்கு பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகமாக நாகர்கோவிலும், குறைவாக உத்திரமேரூரிலும் உள்ளது.

தேமுதிக கூட்டணி
தளி மற்றும் காட்டுமன்னார்கோயில் இரண்டாம் இடமும், 112 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 105 தொகுதிகளில் நான்காம் இடமும் தேமுதிக கூட்டணி பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகளில் ஐந்து தொகுதியில் மட்டுமே 15 சதவீதற்குமேல் வாக்குகளைப் பெற்றது. மேலும் மதிமுகவின் கோவில்பட்டி, இடதுசாரியின் தளி, திருத்துறைப்பூண்டி, விடுதலைச் சிறுத்தையின் காட்டுமன்னார்கோயில், அரூர், புவனகிரி என மொத்தமாக ஆறு தொகுதிகளில் டெபாசிட் தொகை இழக்கவில்லை. மொத்தமாகப் பார்த்தால் 15 சதவீதற்குமேல் 8 தொகுதியும், 10-15 சதவீதத்தில் 20 தொகுதியும், 5-10 சதவீதத்தில் 87 தொகுதியும், 2-5 சதவீதத்தில் 107 தொகுதியும், 2 சதவீதத்திற்கும் குறைவாக 10 தொகுதியில் மட்டுமே இக்கூட்டணி பெற்றுள்ளது. தேமுதிக மட்டும் போட்டியிட்ட தொகுதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்ற தொகுதிகள் ஏழு மட்டுமே. 112 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 105 தொகுதிகளில் நான்காம் இடமும் பெற்றுள்ளது. எந்தத் தொகுதியிலும் ஐந்தாம் இடத்திற்கு கீழே செல்லவில்லை. எனவே பாஜக, பாமக உடன் ஒப்பிட்டளவில் பரவலாக வாக்கு வங்கி இக்கூட்டணிக்கு இருந்தாலும் வெற்றி பெற போதியளவிற்கு இல்லை. 230 தொகுதியில் நின்று பாமக சராசரியாக 10003.36 வாக்கு பெற்றுள்ளது. 103 தொகுதியில் நின்று தேமுதிக சராசரியாக 10042.56 வாக்கு பெற்றுள்ளது.

நாதக
திருப்பரங்குன்றம், உடுமலைபேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இல்லை. ஒரு சதவீதத்திற்கும் மேல் வாக்கு வாங்கிய தொகுதிகள் 101 அதில் இரண்டு சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்கியுள்ள தொகுதிகள் 18 ஆகும். கடலூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் 3% மேல் ஆதரவு உள்ளது. தளி தொகுதியில் தான் நாம் தமிழர் கட்சி மிகக்குறைந்த ஆதரவு சதவீதத்தைக் கொண்டுள்ளது. 15 தொகுதிகளில் நான்காம் இடம், 77 தொகுதிகளில் ஐந்தாம் இடம், 81 தொகுதிகளில் ஆறாம் இடம் பெற்றுள்ளது.


ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு, தலா ஐந்து தொகுதிகளில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளது. ஜான் பாண்டியனின் மக்கள் முன்னேற்றக் கழகம் 50 தொகுதிகளில் போட்டியிட்டு, திருவாடனையில் நான்காவது கட்சியாக வந்துள்ளது. சூப்பர் நேஷன் பார்ட்டி என்ற கட்சி ஆம்பூரில் மட்டும் போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 156 இடங்களில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் ஐந்தாவது கட்சியாக வந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு நெய்வேலியில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. நெய்வேலியில் திமுகவிடம் 17791 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது அதிமுக. ஆனால் அதிமுகவில் கூட்டணி வாய்ப்பில்லாத வேல்முருகன் இத்தொகுதியில் 30000க்கு மேல் வாக்கு வாங்கியுள்ளார். அதேபோல அனைத்திந்திய பார்வர்டு பிளாக் நாங்குநேரியில் காங்கிரசின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. 28 தொகுதிகளில் போட்டியிட்டு ராயபுரத்தில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.


ஓட்டுப் பிரிப்பு.
23 தொகுதிகளில் வெற்றிக்கான வித்தியாசத்தைவிட நோட்டோ உட்பட மற்றவர்கள் குறைவாகவே வாக்கு வாங்கியுள்ளனர் அதனால் ஓட்டுப் பிரிப்பு நடக்க வாய்ப்பில்லை. மீதியுள்ள 209 தொகுதிகளிலும் ஒருவகையில் வாக்கு சிதறினாலும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று கொள்ளமுடியாது. ஆனால் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த கட்சி அதிக வாக்குப் பெற்றால் அது கட்டாயம் வெற்றியைத் தீர்மானிக்கும். அவ்வகையில் 129 தொகுதிகளில் மூன்றாம் இடம் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. பல முனை போட்டி என்பதால் நான்காவது இடத்தையும் கணக்கில் கொண்டால் கூடுதலாக 42 தொகுதிகள் இவ்வகையில் வருகின்றன. ஜனநாயக நாட்டில் ஓட்டுப் பிரியும் என்று பல முனை போட்டியை எதிர்க்கத் தேவையில்லை ஆனால் அதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.

தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், விஜய பாரத மக்கள் கட்சி என மொத்தம் 92 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. சுயேட்சையாகப் போட்டியிட்ட இந்து மக்கள் கட்சி போன்றவை, சிவசேனா சின்னத்தில் நின்ற அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போன்றவை என வெளிப்படையாகத் தெரியாத கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளன. மேலும் இத்தேர்தல் முடிவுகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வு அறிக்கை இங்கே


கீற்று இதழுக்காக எழுதிய கட்டுரை

No comments:

Post a Comment