Pages - Menu

Saturday, June 13, 2015

சென்னையென்ன சுரண்டல் சமூகமா?

சென்னையைத் தவிர பிறபகுதிகளில் பத்துமணி நேரம் வரை மின்தடையும், சென்னையில் சில மணிநேர மின்தடையும் நிலவிய வரலாறு கடந்தாண்டுகளில் நிகழ்ந்தன. சென்னையில் குடிநீர்ப்பிரச்சினைக்கு புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் என பெரியளவில் திட்டங்களைப் போட்டு எதிர்கொண்ட நாம் பிற பகுதிகளில் உள்ள ஏரிகளைத் தூர்வாராமலே விட்ட அவலமும் உண்டு. தேசியத் திட்டங்களின் போது தமிழகப் பிரதிநிதியாக சென்னை மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது, வந்து செல்லும் ரயில்கள் சென்னையுடனே குலாவுகின்றன‌. அனைத்து நலத்திட்டங்களும் சென்னையிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறமாவட்டங்களில் இருந்து வேலைக்காக சென்னை நோக்கி வரும் இளைஞர் படை என்ன உணர்த்துகிறது? பிற மாவட்டங்களைவிட சென்னைதான் அதிகச் செல்வம் விளையும் இடம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. சென்னையும் அதன் புறநகர்ப்பகுதிகள் நீங்கலாக தமிழகத்தின் பிறபகுதிகள் அனேகமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.



இது ஏறக்குறைய அனைத்து தலைநகரின் நிலை என்றாலும் இத்தகைய பொருளாதாரக் குவிவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நமக்குத் தேவை. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் ஒரு நிலத்தின் மதிப்பு அதிகமாகயிருப்பதற்குக் காரணம் தேவைகள் அதிகரித்திருப்பதே. தமிழகத்தின் அனேகப் பொருளாதார நகர்வும் சென்னையை மையமாகக் கொண்டுள்ளதால் அங்கே மக்கள்தொகை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே முதலீடு செய்த அல்லது வாழும் மக்கள் சந்தை விலையின் வளர்ச்சி விகிதத்தை மேலும் மேலும் உயர்த்தவே விரும்புவர், இதுவொருவகை செயற்கை விலையேற்றம் என்றாலும் ஒரு கட்டத்திற்குப் பின் சொத்துக்குமிழ் (Property bubble) உடைந்து நட்டப்படலாம் என்பது ஒரு புறமிருக்க இதனால் சென்னையில் வாடகைக்கு இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வடதமிழகப் பகுதியினரின் செல்வம் எளிதில் பெருக வாய்ப்பு கிடைக்கிறது. சில சதுரடியில் ஒரு இடம் இருந்தாலே அங்கே அடுக்குமனைகளைக் கட்டி வாடகைக்கு விட்டே எந்தத்தொழிலும் செய்யாமல் சென்னையில் வாழ்ந்துவிடலாம் என்ற நிலையுள்ளது. மேலும் மக்களின் தேவை அதிகரிப்பால் நுகர்வோர் எண்ணிக்கை பெருகி அதைக் கொண்டு பெரு நிறுவனங்கள் தண்ணீர் உட்பட பொருட்களை அதிகவிலையில் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்


வணிகரீதியாகவும், பூகோளரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் சென்னையின் முக்கியத்துவம் அதனைத் தலைநகராக நிலைநிறுத்தினாலும் மற்ற ஊர்களும் முன்னேற்றப்பட வேண்டாமா? உண்மையில் தமிழகத்தின் அறிவுச்செல்வங்களும், அறிவுச்செல்வர்களும், அறிவுப்பண்பாடும் தமிழகத்தின் பிறபகுதியில்தான் அதிகம் காணமுடிகிறது. ஒவ்வொரு தலைமுறையாக இவர்கள் எல்லோரும் தலைநகருக்கு ஈர்க்கப்பட்டு வளர்ச்சியின் மையத்தில் குவியத் தொடங்குகிறார்கள். இன்று விரல்விட்டு எண்ணும் பெரிய ஆளுமைகள் எல்லாம் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். ஜனநாயகக்கடமையான வாக்கு சதவிகிதமும் பிற பகுதிகளைவிட சென்னையில்தான் குறைவு. இயற்கைவளங்களும் சென்னையில் குறைவுதான். ஆனாலும் மென்பொருள் நிறுவனங்களாக இருந்தாலும், மின்னணு நிறுவனங்களாக இருந்தாலும் சென்னைக்கு அருகேதான் அமைக்கப்படுகின்றன‌. இப்படி மீண்டும் மீண்டும் தொழில்வாய்ப்புகளை அதிகரித்து மக்கள்தொகையைப் பெருக்கி வளர்ச்சியின் பெரும்பங்கை இப்பகுதியே எடுத்துக் கொள்கிறது.



காவிரிப் பாசன விவசாயிகள் கூட சென்னையில் போராட்டத்தை நடத்தினால் தான் கவனத்தைப் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்தில் பாதிக்கப்படும் மீனவர் சென்னைக்கு வந்துதான் நீதிகேட்க வேண்டியுள்ளது. ஆசிரியர், போக்குவரத்துப் பணியாளர்கள் என யாருடைய எந்தப் போராட்டம் என்றாலும் சென்னையைத் தொடாமல் அது மக்கள் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் வருவது அரிது. இதனால் சென்னைப் பகுதிசார்ந்த சமூகங்களின் வளர்ச்சி அதிகரிப்பால் இவர்களே உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள், தமிழகத்தின் அதிகார மையங்களும் இங்கிருந்தே பிறக்கின்றன‌, ஊடகங்களும் இவர்களை ஒட்டியே இயங்குகின்றன‌. கலைத் துறையும் இவர்களின் இருப்பிடமே. இதெற்கெல்லாம் முன்வைக்கப்படும் காரணங்கள் பெருநகரம், வணிகநகரம், தலைநகரம். உண்மைதான் ஆனால் அத்தகைய ஏற்றத்தாழ்வை உடைக்க வேண்டியது தானே ஜனநாயகமாண்பு. உணவு, கல்வி, சமூகநீதி என மக்களின் அனைத்து முக்கியத் தேவைகளும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டுள்ளதால் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கலைய வேண்டியதே நமது முக்கியப் பணியாகும்.



ஒரு சுரண்டல் சமுகமாக மாறுவதைத் தடுக்க வேண்டியதும் தற்போதைய தேவை. எல்லாவற்றிற்கும் சென்னைவாசிகள் என்றோ, ஆட்சியாளர்கள் என்றோ பலி சுமத்த முடியாது. அனைவரின் அறியாமையும் இதில் சேர்ந்தே உள்ளது. கொங்கு மண்ணோ, பாண்டி மண்ணோ, நாஞ்சில் மண்ணோ யாராயிருந்தாலும் சென்னையில் சொந்தமாகச் சொத்து வாங்கிவிட்டால் சென்னை மண் என்று மாறிக்கொள்வோம் என்பதை மறுக்க முடியாது. எனவே தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களைப் பொருளாதரரீதியாக சமநிலையில் அமைக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.



அரசின் நிதியுதவிகளில் தொடங்கும் திட்டங்கள், நடத்தப்படும் கூட்டங்கள், முதலீடுகள் போன்றவற்றில் பிறபகுதிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சென்னையில் நில உச்சவரம்புச் சட்டம், தமிழ்நாடு கட்டடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டம் போன்ற சொத்துச் சட்டங்களைக் கடுமையாக்கி விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். புதிய தொழிற் நிறுவனங்களுக்குச் சலுகையில் வழங்கப்படும் சிறப்புப் பொருளாதார மையங்கள் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அமைக்க வேண்டும். மதுரை, கோவை, திருச்சி போன்ற சென்னைக்கு அடுத்தநிலை தொழிற்நகரங்களை முன்னேற்ற போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரசின் பல செயலகம், வாரியம், கிடங்கு, அமைப்பு போன்ற நிறுவனங்களின் அலுவல் தலைமையிடங்களை அத்துறைசார்ந்த பிற பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். பிறபகுதிகளின் இயற்கை வளங்களைக் காக்கவும் முறையாகப் பயன்படுத்தவும், நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்யவும் வேண்டும். சர்வதேச மாநாடுகளைப் பிற மாவட்டங்களில் நடத்தி சுற்றுலாத் துறையையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தன்னிறைவு கிராமத்தை முன்மாதிரியாக உருவாக்குவதன் மூலம் தொழிற்வாய்ப்புகள் பரவலாக்கப்படும். இப்படி அரசு எடுக்கும் முடிவுகள் அடுத்து தனியார் முதலீடுகளையும் பிறபகுதிகளுக்கு இழுத்துச் செல்லும். "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை- நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!" என்ற கண்ணதாசன் வரிகள் நிஜமாக்க முயல்வோம்.



கீற்று இதழுக்காக எழுதியது

1 comment:

  1. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    ReplyDelete