Pages - Menu

Friday, April 17, 2015

இங்கு நெட் நியூட்ராலிட்டி ஒரு மாயை


தற்போது பேசப்பட்டுவரும் முக்கிய விவாதமான இணையச் சமநிலை(Net neutrality) குறித்து வைக்கப்படும் ஒரு வாதம் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் ஒவ்வொரு கட்டணம் இனி சுதந்திரமாக இணையத்தளத்தில் பயன்படுத்தமுடியாது என்பதாகும். இதை இணையநுட்பம் அறிந்தவர்களே நம்பும் போது சாதரண மக்களுக்கு இது சாத்தியமா என்று தெரியவாய்ப்பில்லை. இணையம் ஒரு வலைப்பின்னல் இதில் ஒன்றை மட்டும் தடுப்பதென்பது அவ்வளவு எளிதில்லை ஆனால் ஒன்றை முன்னிலைப் படுத்தலாம். எத்தனையோ முறை பலநாட்டரசுகள் பல தளங்களை முடக்கக் கோரினாலும் மீண்டும் மீண்டும் அவை முளைத்த வரலாற்றை நாம் பார்க்கலாம். ஒரு வலைத்தளத்தை அந்த முகவரி இட்டுத்தான் படிக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு செய்தியோடை (RSS) படிப்பான் மூலமோ, பிரதி தளங்கள் (proxy) மூலமோ எனப் பலவழிகளுள்ளன ஏன் கூகிள் தேடலில் உள்ள cached கோப்பு மூலமே படிக்கமுடியும். அப்படியிருக்கையில் எதைக் கட்டுப்படுத்த முடியுமெனில் இதர மல்டிமீடியா சேவையான காணொளிகள், குறுஞ்செய்தி தூதர்கள், ஐ.பி.தொலைப்பேசிகள் போன்ற தொலைத்தொடர்புத் துறை வருமானத்தைப் பாதிக்கும் வசதிகளை மட்டும்தான். இதற்குப் பெயர் ஓடிடி சேவை(OTT Service). இதில் கருத்துச் சுதந்திரப் பறிப்போ, சமநிலை பாதிப்போ தலையிடுவதில்லை. பிரஞ்சு, தாய்வான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இத்தகைய சேவையைத் தரும் இணையத்தளங்களைத் தகவல்தொடர்பு நிறுவனமாகக் கருதுகின்றனர். சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதற்கு இணையக் கட்டண வேறுபாடுகள் உள்ளன. வியட்நாம் போன்ற இன்னும் சில நாடுகள் இவற்றைத் தடைசெய்யவும் முயல்கின்றனர்.


உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதிவாங்கி வரிகட்டி நீங்கள் ஒரு கடை வைத்து, அதிகாலையில் சென்று காய்கறி மூட்டைகளைச் சரக்குவண்டியில் எடுத்துவந்து 10% லாபத்தில் ஒரு காய்கறிக்கடை நடத்துகிறீர்கள். நீங்கள் விற்றுவரும் அதே பொருட்களை ஒரு பெருநிறுவனத்தால் மொத்தக்கொள்முதல் மூலம் 5%லாபத்தில் விற்க முடியும். அப்படி இணையத்தில் வர்த்தகம் மூலம் காய்கறிகளை இலவச இல்லம் சேர்ப்பு(door delivery) என்றும் சொல்லி உங்கள் வாடிக்கையாளர்களைப் பிடித்துக்கொண்டால் உங்கள் நிலையென்ன? அந்தநிலையில்தான், இந்தியத் தந்திச் சட்டம் 1885ன்படி அனுமதிவாங்கி, அலைப்பேசி கோபுரங்கள் அமைத்து, அதன் வழியாக ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்புச் சேவையை அளித்துவரும் நிறுவனங்கள் உள்ளன. அதன் சேவையைப் பயன்படுத்திக்கொண்டு அதன் வருமானத்தைப் பறித்துக் கொண்ட ஓடிடி இணையத்தளங்கள் இந்நிலைக்குக் காரணம். ஒரு இடத்தை விவசாயம் செய்ய வேறொருவருக்குக் குத்தகைக்கு விடுகிறோம். அவ்வாறு குத்தகைக்கு வாங்கியவர் தனது விளம்பரப் பலத்தால் அதிகவிலைக்கு வேறொருவருக்கு மறுகுத்தகைக்கு விட்டு லாபம் எடுத்தால் நாம் சும்மாயிருப்போமா? நமது வருமானம் பாதிக்கும் போது என்னநிலை எடுப்போமோ அதே நிலையில்தான் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்துள்ளன. அப்போது மறுகுத்தகைக்கு விட்டவர், தனது லாபத்தை உங்களுடன் பங்கிட்டுக் கொண்டால் வாங்கிக் கொள்வோமா அல்லது பழைய விலைக்கே கொடுப்போமா? அதாவது அப்படி லாபம் அடைந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இலவசமாகத் தங்களது தளங்களைத் தந்தால் வாங்கிக்கொள்ளாமல் இலவசத்தை எதிர்ப்பதன் நோக்கமென்ன?

உண்மையில் இணையச் சமநிலை என்பது சுயசார்பாகச் சில தளங்களைத் தடைசெய்வதையும், ஆரோக்கியமான போட்டிச்சூழலை ஒழிப்பதையும் தான் குறிக்கிறது. அதிகமாகப் பலனடைபவர்களுக்கும், பலனடையாதவர்களுக்கும் ஒரே மாதிரி விலைவைப்பது சமநிலை அல்ல. தற்போது அமெரிக்காவில் FCCயிடம் (கட்டுப்பாட்டு அமைப்பு) கேட்கும் இணையச் சமநிலையும் இந்தியாவில் TRAIயிடம் கேட்கும் இணையச் சமநிலையும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அண்மையில் FCC வெளியிட்டுள்ள இணையச் சமநிலை குறித்தான விதிகளில், மூன்று விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சட்டரீதியான தளங்களைத் தடைசெய்யக்கூடாது, அத்தளங்களுக்கான இணையப் போக்குவரத்தைச் சிதைக்கக்கூடாது, சில தளங்களை மட்டும் வேகமாகக் காட்டக்கூடாது என்பதாகும். இதற்குப் பெயர்தான் இணையச் சமநிலை, தரவுக் கட்டணமற்ற தளங்கள் இருக்கக் கூடாது என்பதல்ல. மேற்கூறிப்பிட்ட விசயங்கள் எல்லாம் (காசு வாங்கிக்கொண்டு) மறைமுகமாகச் செய்யக்கூடியவை என்பதாலேயே வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் விதத்தில் இணையச் சமநிலைச் சட்டம் இருக்கவேண்டும். அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளதால் அடையும் வருமானத்தை இலவசச் சேவையாகப் பங்கிட்டுக் கொள்ள சில பெருநிறுவனங்கள் முயல்கையில் எதிர்ப்பது தேவையற்றது. இலவசம் என்பது பொருளாதாரவுலகில் சாத்தியமில்லை ஆனால் தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியால் அடையும் பலனை இலவசம் என்று அழைத்துக் கொள்ளலாம்.

ஒரு பயனராக விலைகள் ஏறும் போது எதிர்ப்பது நியாயமான நடவடிக்கை ஆனால் அந்த விலையேற்ற எதிர்ப்பைச் சுதந்திரப் போராட்டமாகக் கட்டமைப்பதுதான் இங்குப் பிரச்சினை. அப்படி சுதந்திரப் போராட்டமாக மாற்றி அதன் மூலம் வணிகப் பலனடைபவர்கள் பற்றி விழிப்புணர்வும் வேண்டும். உண்மையில் இத்தகைய சமநிலையை நடைமுறைக்கு ஏற்றுக்கொண்டுள்ளோமா? இணைய வர்த்தகத்தின் போதும் சிறு வியாபாரிகளுக்கோ, இணைய கைப்பேசி ரீச்சார்ஜால் பாதிக்கப்படும் ரீச்சார்ஜ் முகவர்களுக்கோ குரல் கொடுக்காமல் நகர்ந்த நாம் இன்று போராடத் தூண்டியது வணிகச் சூழ்ச்சியாக இருக்கலாம். அல்லது ஒருவகை வர்க்கசார்பு நடவடிக்கையாக இருக்கலாம். நெட் நியோட்ராலிட்டி வேண்டும் அது இலவசங்களைத் தடைசெய்யாமல் நியாயமான வெளிப்படையான கொள்கைக்காக வேண்டும். மேலும் FCCவிதியின் மற்றொரு அம்சமும் கவனிக்கத்தக்கது, செயல்பாடுகளின் அடிப்படையில் விலைநிர்ணயம் கூடாது என்பதாகும். அப்படியெனில் இரண்டு வாதம் மட்டுமே உள்ளன. ஒன்று TRAI கேட்கும் OTTன் கட்டணவிதிப்புக் கொள்கையைக் கைவிட்டு தரவுக் கட்டணமற்ற சேவைக்கு இது தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தவேண்டும். அல்லது OTT கட்டணவிதிப்பை அமல் செய்து, அக்கட்டணத்தை ஏற்கும் நிறுவனத்தளத்திற்கு விலக்கு தந்து வெளிப்படையான நிர்வாகத்தை அதாவது இணையச் சுதந்திரத்தை உறுதிசெய்யவேண்டும். இப்படி கட்டணச்சேவை வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள் ஆனால் தரவுக்கட்டணமற்ற தளங்கள் இச்சுதந்திரத்தைப் பாதிப்பவையல்ல என்பதே வாதம்

சில தளங்கள் செலவற்றுக் கிடைப்பது கருத்துச் சுதந்திரப் பறிப்பல்ல. உங்கள் கருத்தை இப்படி இலவசமாகக் கிடைக்கும் பேஸ்புக்கில் கூட வெளியிடலாம். உங்கள் கருத்திற்கும் கட்டணத்திற்கும் தொடர்பில்லாத போது இது எப்படி கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும்? freedom of speech என்பது கருத்துரிமையே தவிர இலவசத் தொலைப்பேசி உரையாடலல்ல. மக்கள் இதுவரை எப்படி பயன்படுத்தினரோ அப்படியே பயன்படுத்தலாம் அல்லது இலவசத் தளங்களை வாங்கிக்கொண்டு கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த இலவசத் திட்டம் எழைகளுக்கானது என்று சொல்வதால் எது வேண்டும் என்பது பயனர்களின் கையில்தான் உள்ளது. இலவசத்திற்கு அடிமையாகிப் பிற தளங்களைக் காசுகொடுத்துப் பார்க்கமாட்டேன் என்பது பயனர்களின் குறைதானே தவிர நிறுவனங்களில் குறையில்லையே. இருப்பவர்களை மட்டும் பார்க்காமல் இல்லாதவர்களுக்கு இணையம் என்ற ஒரு வசதிகொண்டு சேர்கிறது என்றால் அதை வரவேற்கவேண்டும். கடிகார முட்களை முன்னகர்த்திக் கொள்வதால் சூரியன் நமக்கு மட்டும் சீக்கிரமாக உதிக்காது. தரவுக் கட்டணமற்ற தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுத்து இணையச் சமநிலையைக் காப்போம்.

No comments:

Post a Comment