Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, December 21, 2015

Info Post
நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இணையச் சமநிலை என்பது இலவச பயனுருக்கள் மற்றும் இலவச இணையத்தளங்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகிறது. அதாவது பணமிருப்பவர்கள் தங்கள் இணையத்தளத்தை முன்னிறுத்தி மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகக் காட்டப்படுகிறது. ஆனால் சாமானியரின் பார்வையில் பெருநிறுவனங்கள் தங்கள் இணையத்தளத்தை இலவசமாக வெளியிட அனுமதிக்கக்கூடாது என்ற வாதமாகப் பார்க்கப்படுகிறது. இலவசம் கொடுப்பதும் அதை மற்றவர் எதிர்ப்பதும் வணிக நிகழ்வுகள் தான். ஆனால் வணிகத் தந்திரங்களுக்கு ஆட்படும் முன் உண்மையில் இணையச் சமநிலை என்பது எது என்று புரிந்துகொள்ள வேண்டும்.


முதலில் இணையச் சமநிலை தோன்றிய வரலாற்றை அறியவேண்டும் அது தொலைப்பேசி காலம்தொட்டே தொடங்குகிறது. முன்பு தங்களுக்கு இணக்கமான நிறுவனங்களின் அழைப்புகளை வேகமாக வழங்கியும், போட்டியாளர்களின் அழைப்புகளைக் காலம்தாழத்தியும் வழங்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்றொரு நிறுவனத்திற்கு வழிமாற்றியும் பாரபட்சம் காட்டப்பட்டது. தொழிற்நுட்பம் வளரவளர இணையத்தளங்களுக்கும் இம்மாதிரி பாரபட்சம் காட்டப்பட்டு, சில இணையத்தளங்களைத் தடைசெய்தோ, காலம்தாழ்த்தியோ, கட்டணம் அதிகரித்தோ ஒரு நிறுவனத்திற்குச் சாதகமான சிலர் செய்தனர். இதனால் சமமான வாய்ப்புகளின்றி பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வர்த்தகச் சமநிலையின் பொருட்டே இணையச் சமநிலை விவாதிக்கப்பட்டு வெளிப்படையான அணுகுமுறைகளை வகுத்துச் சமமான வாய்ப்பை உறுதிசெய்தனர். இங்கே சமவாய்ப்பு என்பது நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறையைத் தவிர வேறில்லை. ஒரு கோடி லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரு ஆயிரம் லாபமீட்டும் நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியான வரிச்சட்டம் சாத்தியமில்லை. ஆனால் அது வெளிப்படையாக இருக்கவேண்டும். அதுபோல இணையச் சமநிலை என்பது மறைமுகமாகப் பாரபட்சம் காட்டப்படுவதைத் தான் குறிக்குமே தவிர ஆரோக்கியமான போட்டிச் சூழலை அல்ல.

அப்படி என்ன இங்கு நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்துடன் சேர்ந்து ரிலையன்ஸ் கொண்டுவந்த இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் பேஸ்புக் உட்பட 33 வலைத்தளங்கள் இலவசமாக வழங்கியது. முன்பு ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ஜீரோ என்ற திட்டத்தின்கீழ் சேரும் நிறுவனங்களின் தளங்களைக் கட்டணமின்றி பயன்படுத்தும் வசதியைக் கொண்டுவந்தது. இப்போது பேஸ்புக் பிரிபேசிக்ஸ் என்ற திட்டத்தைக் கொண்டுவர மக்கள் ஆதரவைக் கேட்கிறது. இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் வந்தன அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் யாரேனும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து நலத்திட்ட உதவி செய்தால் இனி கிராமத்தினர் வேலைக்குப் போகமாட்டார்கள் என்பது போலவுள்ளது. மனத்தடங்களுக்காகப் பெரிய திட்டங்களைத் தடைபோடமுடியாது. செலவில்லாமல் பலருக்கு இணையம் கிடைக்கிறது என்றால் அதை வரவேற்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டிக் கொண்டு விலையில்லாமல் பத்திரிகை வெளியிடுகிறோமோ அதுபோல இதுவொரு வணிகயுக்தி.

இரண்டாவது வாதம், இதனால் சிறுநிறுவனங்கள், தொழில்முனைவோர் இணையத்தில் பணம் செலவழிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாகும். இதுவொருவகை வினோதமான வாதம். இணைய அங்காடிகள் மூலம் பொட்டிக்கடைகளையும், சிறுவியாபாரிகளையும் பாதிப்பதாகச் சொல்லும் போது இதே நிறுவனங்கள் சொல்லிய பதில்தான் இதற்கான பதிலும்கூட. திறமையும், தகுதியும் இருக்கும் போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எல்லாவற்றுக்கும் மேல் செலவுகளைக் குறைக்கும் வழியைத் தேடுவதுதான் வளர்ச்சிக்கான பாதை. வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்க முயலலாமே தவிர போட்டிக்கான சூழலை ஒழிக்கக் கூடாது.

மூன்றாவது வாதம், சிலதளங்களை முன்னிலைப்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதாகும். இணையத்தில் கருத்துக்களைப் பகிரும் சமூகத் தளங்கள் மட்டுமல்ல விற்பனை, தொழிற்நுட்பம், வங்கிப்பணி போன்ற இதர தளங்களும் உள்ளன. சில செய்தித்தாள்கள் இணையத்தில் விலையில்லாமல் கிடைப்பதால் அது மற்ற தாள்களின் கருத்தைத் தடைசெய்வது என்பதில்லையே. இதில் கருத்துச் சுதந்திரம் பறிப்பதாகச் சொல்வது அபத்தம். இத்திட்டத்தில் இலவசமாகக்கிடைக்கும் சமூகத்தளத்தில் அதை விமர்சித்தும் எழுதலாமே. மாறாக, கோடிகளில் சம்பாரிக்கும் தளங்களிடையே நடக்கும் போட்டியை ஏன் தடை செய்யவேண்டும்? இதன் மூலம் எத்தனைப் பேர் அடிப்படை இணையவசதியைப் பெறுவார்கள் மற்றும் இதன் மூலம் இணையச் செலவு குறையும் என்று என்னும் போது இதுவொருவகை தகவல்புரட்சிதானே? இத்திட்டங்களை எதிர்ப்பதற்கு முன் இவ்வசதிகளை மக்கள் பெற என்ன முயற்சி எடுத்தோம் என்றும் யோசிக்கவேண்டும்.

அடுத்த வாதம், இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை. தனியார் இலவசத் திட்டங்கள் அனைத்துத் தளங்களையும் தராவிட்டால் எதிர்ப்போம் என்பதாகும். அனைத்துத் தளங்களையும் இலவசமாகத் தருவதில் உள்ள நடைமுறை செலவுகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். முன்பு விக்கிப்பீடியாவை இலவசமாக ஒரு நிறுவனம் கொடுத்த போது ஆதரித்துவிட்டு, இன்று அதைப்போன்று இன்னொரு திட்டத்தைக் கண்டபின்னர் எதிர்ப்பது முரணில்லையா? தொடர்ந்து கல்வி தொடர்பான தளங்களை அரசு விலையில்லாமல் வழங்கக் கோருவதையும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது என்று சொன்னால் அப்படிப்பட்ட கொள்கை வேண்டுமா என யோசிக்க நேரும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணத்திற்காக இலவச இத்திட்டத்தில் சேராத இணையத்தளங்கள் தடுக்கப்படலாம் என்ற வாதமுண்டு. உண்மையில் சேராத தளங்களால் தான் பயனர்களின் கட்டண வருவாய் கிடைக்கிறது. இருந்தாலும் அத்தளங்கள் அந்நிறுவனத்தால் தடுக்கப்படுமென்றால் மற்றொரு நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாமே. இறுதியான ஒரு வாதம், இதன் மூலம் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கட்டணம் விதிக்கப்படலாம் எனவே முக்கிய தளங்களுக்குக் கட்டணம் அதிகரிக்கும் என்பதாகும். இது ஒரே நிறுவனமென்றில்லாமல் பல்வேறு போட்டிகள் கொண்ட வர்த்தகச் சுழலில் இது சாத்தியமில்லை. குறுந்தகவல் கட்டணம் அதிகமான போது இலவச பயனுருக்கள் உதவவில்லையா? வெளிநாட்டுக்கான தொலைப்பேசிக் கட்டணம் அதிகமான போது இணையம் வழி பேசவில்லையா அதுபோல புதிய நிறுவனங்கள் இப்போட்டிக்கு ஈடு கொடுத்து புதிய வசதியைக் கொண்டுவரும். இருந்தாலும் அனைத்துத் தகவல்தொடர்பு நிறுவனங்களும் சேர்ந்து கட்டணங்களை உயர்த்தி புதிய நிறுவனங்களை வரவிடாமல் தடுத்தால் என்ன செய்ய என்றால், கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும், ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவரலாம். ஆனால் இலவச சேவையைத் தடுக்கக் கூடாது.

எப்படி மிஸ்ட் கால் கொடுத்து பிற நிறுவனத்தின் செலவில் விலையில்லாமல் தொலைப்பேசிகளில் பேசுகிறோமோ அல்லது டோல் ஃப்ரி எண்ணில் பேசுகிறோமோ அல்லது இலவச டோர்டேலிவரி மூலம் வாங்குகிறோமோ அதுபோலவே இதையும் பார்க்கவேண்டும். இலவசமாக அதாவது பயனர்களின் கட்டணத்தை ஏற்றுக் கொண்டு ஒரு நிறுவனத்தால் விலையில்லாமல் ஒரு இணைய சேவையைத் தரமுடிந்தால் அது பயனுடையதே. தகவல்தொடர்பு நிறுவனங்களின் இலவச இணைய சேவையை இப்படி எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இணைய நிறுவனமான கூகிள் தகவல்தொடர்புத் துறையில் காலூன்றி இலவச இணைய சேவையை அளிக்க முயன்று வருகிறது. வருங்காலத்தில் மனிதர்களை இணைப்பது இணையம் என்பதால் கட்டணமில்லாச் சேவைகள் தான் அதிகரிக்கும். பல நாடுகளில் இத்தகைய கட்டணமில்லா இணையச் சேவை பயன்பாட்டில் உள்ளதையும் கவனிக்க வேண்டும். எப்படி அரசுத் தொலைக்காட்சி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதைப்போல நாளை அரசுசார்ந்த இணையத்தளங்கள் இலவசமாக மக்களுக்குத் தரப்படலாம் (தரவேண்டும்) அதுபோன்ற திட்டங்களை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டி வேண்டாம் அதேவேளையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்து, மறைமுகப் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நெட் நியூட்ராலிட்டிதான் வேண்டும் என்போம்.

திண்ணை இதழுக்காக எழுதிய கட்டுரை

1 comments: