Pages - Menu

Tuesday, February 25, 2014

விளம்பரங்களுக்கு விலை போகிறோம்

நாகரீகம் அடைந்து அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியான பிறகே சுகாதாரம் என்கிற அறிவியல் அணுகுமுறை நமது வாழ்க்கை முறையுடன் வேரூன்ற தொடங்கியிருக்கும். அதைப்போல பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பரம் என்கிற மாயத் தேவையும் நம்முடன் சேர்ந்துவிட்டது. இதனால் அறிவியல் அணுகுமுறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு ஆடம்பர அணுகுமுறையே பிரதானமாக மாறிவருகிறது. எங்கு யார் சொன்னாலும் உடனே மாறிவிடுவோம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் வேண்டிய ஊட்டச்சத்து இல்லை அதனால் இந்தச் சத்து மாவைப் பாலில் கலக்கிக் குடியுங்கள் என்றதும், குடும்பமே விழுந்து விழுந்து குடிப்போம். அந்த மாவைக் குடிக்காவிட்டால் குடல்வெந்து குன்றிவிடுவோம் என நினைத்துக் கொள்கிறோம்.

ஆல், வேம்பு, வேல் போன்ற மரக்குச்சி கொண்டும், நெற்சாம்பல், செம்மண் போன்ற தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் கொண்டும், பற்பொடிகள், மூலிகைத் தூள்கள் என்று பிற தயாரிப்பைக் கொண்டும் பல் விளக்கி வந்த நம்மிடம், சுகாதாரம் என்கிற போர்வையில் எத்தனைப் பொருட்கள் வந்துள்ளன என்று பார்ப்போம். தூத்பிரஸ் என்கிற புதுவகை பல்குச்சி வஸ்துவை இறக்குமதி செய்தோம். பின்னர் பாரம்பரிய முறைகளை முடக்கிவிட்டு, பற்பசையுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தோம். அதோடு நிற்கவில்லை, பற்பசைகளில் பல வகை வெளிவரத்தொடங்கின, வெண்மை நிறம் தருபவை, சுவாசப் புத்துணர்ச்சி தருபவை, கிருமிகளை நீக்குபவை, ஈறுகளைப் பலப்படுத்துபவை, உப்புவுள்ளவை என வே​ளைக்கு ஒன்றாக வந்து கொண்டே உள்ளன. பற்பசை இப்படியிருக்க பல்குச்சியும் தன் பங்கிற்கு, ஃபிலக்சிபில், ஜிக்ஜாக், 360டிகிடி, மருத்துவர்கள் பரிந்துரை எனப் பலவகைகளில் பரிணாமம் அடைந்துவிட்டது. இதற்கிடையில் நாக்குத் துடைப்பான், வாய் கழுவுநீர் என்று புதிய பரம்பரைகளும் வந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் ஒவ்வொரு பல்லிற்கும் ஒவ்வொரு பற்குச்சியும், பற்பசையும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒவ்வொரு விளம்பரமும் சில ஆயிரம் மக்களின் மனதில் அறிவீனத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்களுக்குள்ளேயே தான் பயன்படுத்தும் பொருள் சரியில்லையோ என எண்ண வைக்கிறது. எத்தனை நவீனம் வந்தாலும் வேப்பங்குச்சிக்கு இணையாக பல்லைப் பலப்படுத்துமா? விரல்கொண்டு தேய்ப்பதைவிட எதுவும் ஈறுகளுக்கு வலுசேர்க்குமா?

இங்கே சுட்டிக் காட்ட விரும்புவது அறிவியல் வளர்ச்சியைப் பகடிசெய்வதல்ல; மாறாக நாம் விலை போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே. நமக்குத் தேவையிருக்காத போதும் விற்கப்படுகிறதே என்று வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். தற்போது பயன்படுத்திவரும் பொருள் திருப்திகரமாகயிருந்தாலும், தனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஒரு பற்பசை விளம்பரத்தில் சிரித்தார் என்பதற்காகவே அந்தப் புதுப் பொருளை வாங்குவோர் எத்தனைப் பேர்? ஷாம்பூ எனப்படும் சிகைகழுவியை எடுத்துக் கொள்ளுங்களேன், பொடுகு போக்குபவை, கறுப்பு நிரம்தருபவை, நீளமான முடிவளர்ப்பவை, சிக்கு நீக்குபவை, பட்டுபோன்ற மென்மைதருபவை என வகை வகையாக வந்துவிட்டன. அதுவரை சிகைக்காய் போட்டு வளர்ந்த தலைகள் கூட சிகைகழுவியின் மீது ஆர்வம் கொள்ளப்பட்டன. ஆனால் அப்படியென்ன சிகைக்காய் செய்யாததை இந்தத் திரவங்கள் செய்துவிட்டன என்றால் ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய இரசாயனச் சிகைகழுவிகளால் முடியும், தோலும் கெட்டதுதான் மிச்சம். எவை வேண்டுமோ பயன்படுத்துங்கள் ஆனால் அவற்றின் தேவை இருக்கிறதா என யோசித்துப் பார்த்துப் பயன்படுத்துங்கள்.

மற்றும் ஒரு எளிமையான நுகர்பொருள் கைப்பேசி. ஒரு குழந்தை பிறந்து விவரம் தெரிகிறதோ இல்லையோ, கைப்பேசியை இயக்கத் தெரிந்திருக்கிறது, தனக்கு என்று ஒரு கைப்பேசியை வாங்கிக் கொள்ளவும் முனைகிறது. அப்படி வாங்கிய கைப்பேசியை எத்தனை நாள் பயன்படும் என்றால் அடுத்த பிறந்த நாள் வரும்வரை மட்டுமே. இது குழந்தையின் பிறந்த நாள் அல்ல புதியதாகச் சந்தைக்கு வரும் கைப்பேசியின் பிறந்த நாள் ஆகும். இதைக் குழந்தைகள் மட்டும் செய்யவில்லை ஏறக்குறைய பலரும் புது ரகம் வந்தவுடன் தனது பழைய பொருட்களை வீசிவிடுகிறார்கள். தனக்குத் தேவையே இல்லாவிட்டாலும் அந்தப் புதிய பொருளைப் பயன்படுத்திவிடவே ஆசைப்படுகிறார்கள். அந்தப் புது ரகம் எடை குறைவாக இருக்கிறது அல்லது சத்தம் துல்லியமாக இருக்கிறது என்று வலுவற்ற காரணங்களுக்காக விலை கொடுத்து வாங்குகிறார்கள். உண்மையில் அவர்களை விளம்பரங்கள் வாங்கிவிட்டன.

சிகப்பழகு பெற்று உலகை உங்கள் பக்கம் திருப்புங்கள் என்று கூவி முகக்களிம்புகள் விளம்பரம் செய்யப்பட்டால், ஏதோ அந்தக் களிம்புதான் சொத்து என்கிற ரீதியில் காட்டுவதை எல்லாம் முகத்தில் பூசிக் கொள்கிறோம், பின்னர் இளவயதிலேயே தோல் சுருக்கங்களைப் பெற்று வருத்தங்கள் கொள்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் இதைப் போன்றவொரு பொருள் விளம்பரமே இல்லாமல் அண்ணாச்சிக் கடைகளில் இருக்கலாம், அல்லது அம்மா கைப்பக்குவத்தில் கடலை மாவும் பாசிபருப்பு மாவும் போதுமானதாக இருக்கலாம். இதெல்லாம் பத்தாது அதுதான் வேண்டும் என்றால் குறைந்தது ஒரு பொருளை மட்டுமாவது பயன்படுத்துங்கள். அடிக்கடி தோல் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை மாற்றிவதும் ஆபத்து என்பதை மனதில் கொள்க.

போன தலைமுறையில் நமக்கெல்லாம் கம்பங்கஞ்சியும், கேப்பக்கூழும், கைக்குத்தல் அரிசியும் தான் பிரதான உணவாகயிருந்திருக்கும். ஆனால் ஆடம்பரம், கெளரவம்,என்கிற பல காரணங்களுக்காகப் படிப்படியாக பாலிஷ் போட்ட அரிசி, இன்ஸ்டன்ட் மாவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என கிடைப்பதையெல்லாம் உண்டு பல நோய்கள் கிடைக்கப்பெற்றுள்ளோம். கடைசியில் பழங்கஞ்சி உண்டு வாழ மருத்துவரொருவர் பரிந்துரைப்பதுடன் முடிகிறது ஒரு தலைமுறை. இந்த அறிவுரையை முன்னரே கடைபிடித்திருந்தால் எவ்வளவு ஆரோக்கியம்?

ஒரு சாராரின் வாதம் என்னவென்றால் தொழிற்நுட்பம் வளர்கிறது அதனால் நவீனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதாகும். அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது அந்தத் தொழிற்நுட்பம் என்ன? அது நமக்குத் தேவையா? பின்விளைவுகள் வருமா? என ஆராய்ந்து பிறகு வாங்குங்கள் என்கிறது. விளம்பரங்களைக் கண்டு விலை போகாதீர்கள் என்கிறது.

மற்றொரு சாராரின் வாதம் என்னவென்றால் இப்படி நுகர்வோர்கள் பொருட்களை அதிகம் வாங்கினால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும். ஆனால் இப்படி தேவையில்லாதவற்றை வாங்குவதற்கு ஏன் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கத்தைக் குறைக்கவேண்டும்? பணவீக்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே, குறைந்தது அந்தப் பணம் வேறு எங்காவது முதலீடாகவாவது மாறுமே. நமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்களின் சேமிப்பே. நமது சேமிப்பின் மூலமே பல முக்கியப் பணிகளுக்கு முதலீடு கிடைக்கிறது. இத்தகைய நுகர்வோர் கலாச்சாரத்தால் பணச் சேமிப்பும் பாதிக்கும்.

எது தேவை எது தேவையில்லை என நாம் செய்யும் தொழிலில் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாம் செலவளிக்கும் பணத்தில் தீர்க்கமாக ஆராய்வதில்லை. சேமிப்பு என்பது உற்பத்திக்குச் சமம் என்பதையும் மனதில் கொண்டு விளம்பரங்களுக்கு மயங்கி தேவையில்லாதவொன்றை தேடிப்போகாமல் இருக்கலாமே.

வல்லமை இதழில் வெளிவந்த கட்டுரை

2 comments:

  1. இரட்டை இலையை மீட்க முதல்வர், துணை முதல்வர் தில்லி பயணம் : https://goo.gl/rZQq71

    ReplyDelete
  2. As the rate is going on increasing for products from day to day. It's better to save money by investing in properties. According to me, Elite Developers are the best in Kerala as they deliver world-class houses, luxury apartments, and Villas which stands for quality and satisfaction. So I personally suggest Elite Developers for the new home buyers who are looking in Kerala. To know more https://www.elitedevelopers.co.in/

    ReplyDelete